காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து வீடு-கடைகளில் கருப்புக்கொடியேற்றி போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து திருவாரூர் அருகே வீடு- கடைகளில் கருப்புக்கொடியேற்றி போராட்டம் நடைபெற்றது.

Update: 2018-03-29 22:45 GMT
திருவாரூர்,

காவிரி நீர் பங்கீடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இந்த காலக்கெடு நேற்றுடன் முடி வடைந்தது. ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை கண்டித்து விவசாயிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகிறது.

அதன் தொடர்ச்சியாக திருவாரூர் அருகே உள்ள கூடூரில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட பிறகும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசையும், அதற்கு எந்தவித முயற்சியும் எடுக்காத தமிழக அரசையும் கண்டித்து கடைகள் மற்றும் வீடுகளில் கருப்புக்கொடிகளை ஏற்றி விவசாயிகள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உரிமையை மீட்க வேண்டும்

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்கப்படாவிட்டால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும். அ.தி.மு.க. எம்.பி.க்கள் ராஜினாமா செய்வோம் என தெரிவித்து இருப்பது வரவேற்கத்தக்கது. அந்த முடிவில் இருந்து மாறாமல் தமிழகத்தின் எதிர்ப்பை தெரிவித்து மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுத்து தமிழகத்தின் உரிமையை மீட்க வேண்டும் என தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்