குப்பைகளும், கழிவு நீரும் கலப்பதால் முட்டுக்காடு முகத்துவார பகுதியில் வெளிநாட்டு பறவைகளின் வருகை குறைந்தது
குப்பைகளும், கழிவு நீரும் கலப்பதால் முட்டுக்காடு முகத்துவார பகுதியில் வெளிநாட்டு பறவைகளின் வருகை குறைந்து கொண்டே வருகிறது.
திருப்போரூர்,
கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காடு படகு குழாம் உள்ளது. இந்த படகு குழாம், கடலுடன் பக்கிங்காம் கால்வாய் இணையும் முகத்துவாரத்தை ஒட்டி அமைந்துள்ளது. முகத்துவார பகுதியில் மாதந்தோறும் ஏற்படும் கடல்நீரின் ஏற்ற இறக்கத்தின் அடிப்படையில் அரிய வகை வெளிநாட்டு பறவைகள் இரை தேடி வந்து செல்கின்றன.
இந்த பறவைகளை பார்க்கவும், அவற்றை பற்றி அறிந்து கொள்ளவும் சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பறவை ஆராய்ச்சியாளர்கள், பறவை உயிரியலாளர்கள், இயற்கை ஆர்வலர்கள் உள்பட பலர் இந்த பகுதிக்கு சென்று பைனாகுலர் மூலம் பறவைகளை பார்வையிட்டு குறிப்பு எடுத்து செல்கின்றனர்.
சுகாதார கேடு
பல்வேறு உள்நாடு மற்றும் வெளிநாட்டு புகைப்பட கலைஞர்களும், இங்கு வரும் பறவைகளை படம் எடுக்க அதிகாலையிலேயே வந்து காத்திருக்கின்றனர்.
ஆனால், இதன் சிறப்பு தெரியாமல் பழைய மாமல்லபுரம் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் உள்ள ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்தும் கேளம்பாக்கம், கோவளம், முட்டுக்காடு ஆகிய ஊராட்சிகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள், கழிவு நீர் முகத்துவார பகுதியில் கொட்டப்படுகின்றன. இதனால், இந்த பகுதியில் சுற்றுப்புற சுகாதாரம் கெடுவதோடு, பறவைகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது.
ஆர்வலர்கள் வலியுறுத்தல்
எனவே தங்களது பகுதிகளில் சேரும் குப்பை, கழிவுகளை கொட்ட வேறு இடத்தை தேர்வு செய்ய வேண்டும். அரிய வகை வெளிநாட்டு பறவைகள் வரும், முகத்துவார பகுதிகளில் குப்பையை கொட்ட தடை விதிக்க வேண்டும் என்று பறவை உயிரின ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
இந்த கடலும், கால்வாயும் கலக்கும் முகத்துவார பகுதியில் ஏராளமான மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாதிப்பு
இந்த பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் கால்வாய் அருகே கொட்டப்படும் குப்பைகளால் சுற்றுலா பயணிகளின் வரத்து குறைந்து வருகிறது. மேலும், தண்ணீரின் தன்மை மாறி மீன்கள் இறப்பதாகவும், இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிப்பதாகவும் மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் வெளிநாட்டு பறவைகள் வருகையும் குறைந்து வருகிறது.