வெங்கல் அருகே சாலையை சீரமைக்கக்கோரி ஏர் உழும் போராட்டம்
வெங்கல் அருகே புன்னப்பாக்கம் கிராமத்தில் உள்ள ஒன்றிய சாலையை சீரமைக்கக்கோரி மாதர்சங்க நிர்வாகிகள் சார்பில் ஏர் உழும் போராட்டம் நடைபெற்றது.
பெரியபாளையம்,
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் வெங்கல் அருகே புன்னப்பாக்கம் கிராமத்தில் இருந்து அணைக்கட்டு வரை சுமார் ஒரு கிலோ மீட்டருக்கு ஊராட்சி ஒன்றிய சாலை குண்டும் குழியுமாக உள்ளது.
சுமார் பத்து ஆண்டுகளாக இந்த சாலையை சீரமைக்கவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்தும் பயன் இல்லை. இந்த நிலையில், சாலையில் நாளுக்கு, நாள் போக்குவரத்து அதிகமாகி வருகிறது.
குண்டும், குழியுமாக...
பள்ளிக்கூட வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்கள், விவசாயத்துக்கு பயன்படும் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாத அளவு குண்டும், குழியுமாக உள்ளது.
இந்த சாலையை சீரமைக்கக்கோரி எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊத்துக்கோட்டை வட்டகுழுவின் அனைத்திந்திய மாதர் சங்கம் மற்றும் மகளிர் குழுக்கள் ஒரு வருடமாக மனு அளித்தனர்.
நடவடிக்கை எடுக்கவில்லை
கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் ஏர் உழும் போராட்டம் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்திருந்தனர். கோரிக்கை மனு மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருந்து வந்தனர்.
இந்த நிலையில், கோரிக்கை நிறைவேறாததால் நேற்று தங்கள் கோரிக்கையை நிறைவேற்றக்கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க தலைவர் ராஜேஸ்வரி தலைமையில் நேற்று காளை மாடுகளில் ஏர் பூட்டி சாலையில் ஏர் உழும் போராட்டத்தை மேற்கொண்டனர்.
பேச்சுவார்த்தை
மாவட்ட தலைவர் ரமா, செயலாளர் மோகனா, பொருளாளர் பத்மா, விவசாய தொழிலாளர் சங்க வட்ட செயலாளர் பாலாஜி ஆகியோர் கண்டன உரையாற்றினார்.
சம்பவ இடத்துக்கு எல்லாபுரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சதக்துல்லா, ஊராட்சி செயலாளர் ராஜா மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
போராட்டத்தை கைவிட்டனர்
போராட்டத்தை கைவிட வேண்டும் என்று விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தும் அதிகாரிகள் பொதுமக்களின் கோரிக்கை மனு மீது நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருப்பது நியாயமா? போராட்டத்துக்கு பொதுமக்களை ஈடுபட வைப்பது நியாயமா, என்று சம்பவ இடத்துக்கு வந்த வட்டார வளர்ச்சி அதிகாரியை முற்றுகையிட்டு சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
ஒன்றிய பொது நிதியில் பணம் இல்லை எனவே, 2018-2019-ம் நிதி ஆண்டில் சாலை அமைத்து தருவதாக வட்டார வளர்ச்சி அதிகாரி உறுதி கூறினார். இதன் பின்னர், அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.