கலெக்டர் ஆய்வு
நகர்ப்புற வீடற்றோருக்கான தங்குமிடத்தை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி திடீரென ஆய்வு செய்தார்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் பெரியகுப்பம் வரதராஜ நகரில் உள்ள நகர்ப்புற வீடற்றோருக்கான தங்குமிடத்தை நேற்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி திடீரென ஆய்வு செய்தார். அப்போது அவர் அங்கு தங்கியிருந்தோரின் விவரம் குறித்து அங்கிருந்தவர்களிடம் கேட்டறிந்தார். அப்போது அந்த இடத்தில் விளையாடி கொண்டிருந்த குழந்தைகளின் விவரங்களை கேட்டபோது அவர்கள் திருவள்ளூர் நகராட்சி பகுதியில் துப்புரவு பணிகள் மேற்கொள்வதற்காக ஆந்திராவில் இருந்து அழைத்து வரப்பட்ட குடும்பத்தினரின் குழந்தைகள் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பள்ளிக்கு செல்லாமல் இருந்த அவர்களை உடனடியாக பள்ளியில் சேர்க்க வேண்டும் என கலெக்டர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அங்கிருந்த அதிகாரிகள் அங்கு விளையாடிகொண்டிருந்த 11 குழந்தைகளையும் அந்த பகுதியில் இருந்த அங்கன்வாடி மையத்தில் சேர்க்க அழைத்து சென்றனர்.
அதைத்தொடர்ந்து கலெக்டர் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.1 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு சேவை மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் திருவள்ளூரை அடுத்த விஷ்ணுவாக்கத்தில் தோட்டக்கலைத்துறை சார்பாக பூச்சி மருந்துகள் தெளிக்காமல் உற்பத்தி செய்யப்பட்ட காய்கறிகளை பார்வையிட்டு விவசாயிகளிடம் இது தொடர்பான விவரங்களை கேட்டறிந்தார்.
அப்போது அவருடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் எஸ்.எஸ்.குமார், திருவள்ளூர் நகராட்சி ஆணையர் செந்தில்குமரன், திருவள்ளூர் தாசில்தார் தமிழ்ச்செல்வன், நகராட்சி பொறியாளர் உமாமகேஸ்வரி மற்றும் திரளான அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.