கள்ளக்குறிச்சியில் உடலில் தீ வைத்து, 3-வது மாடியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை

கள்ளக்குறிச்சியில் உடலில் தீ வைத்து, 3-வது மாடியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-03-28 21:58 GMT
கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி குளத்து மேட்டு தெருவை சேர்ந்தவர் கருணாமூர்த்தி மகன் சரவணன் (வயது 26). இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்து வந்தார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் உடல் நலம் சரியாகவில்லை என தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சரவணன், தனது குடும்பத்தினருடன் வீட்டில் படுத்து தூங்கினார். பின்னர் நேற்று அதிகாலை சரவணன் வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்துக்கொண்டு தனது வீட்டின் 3-வது மாடிக்கு சென்றார்.

இதையடுத்து அவர் தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் அவரது உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. வலியால் அலறித்துடித்த அவர் திடீரென, 3-வது மாடியில் இருந்து கீழே குதித்தார்.

இந்த சத்தம் கேட்டு அவரது பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து, சரவணனின் உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சரவணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கருணாமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்