5 மாவட்டங்களின் நீராதாரமான முல்லைப்பெரியாறு அணையை அச்சுறுத்துகிறதா நியூட்ரினோ திட்டம்?

5 மாவட்டங்களின் நீராதாரமாக திகழும் முல்லைப்பெரியாறு அணைக்கு நியூட்ரினோ திட்டத்தால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

Update: 2018-03-28 23:45 GMT
தேனி,

தேனி மாவட்டம், போடி அருகே பொட்டிப்புரம் பகுதியில் உள்ள அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்கும் திட்டத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இந்த திட்டம் நாட்டின் வளர்ச்சிக்கான திட்டம் ஒன்று ஒரு புறம் தெரிவிக்கப்பட்டாலும், இந்த திட்டம் குறித்த தெளிவான புரிதல் இன்னும் பெரும்பாலான மக்களிடம் ஏற்படவில்லை. இந்த திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அதுதொடர்பாக ஆய்வுகள் நடத்துவது குறித்தும் விஞ்ஞானிகள் தெளிவான விளக்கம் கொடுக்கவில்லை என்ற குறை மக்களிடம் உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த திட்டம் தொடர்பாக விஞ்ஞானிகள் பங்கேற்கும் வகையில் மாவட்டத்தில் நடத்தப்பட்ட பல கூட்டங்களில், பொதுமக்களின் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் பதில் அளிக்க முடியாமல் விஞ்ஞானிகள் பாதியில் எழுந்து சென்றதும், முறையான பதில் கிடைக்காமல் கூட்டங்கள் முடிக்கப்பட்டதும் மக்களுக்கும், விவசாயிகளுக்கும் இந்த திட்டம் மீதான பயத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால், தேனி மாவட்டத்தில் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு அதிக அளவில் உள்ளது.

இந்த திட்டத்துக்கு ஆய்வுக்கூடம் அமைக்க மலையை குடைவது, பாறைகளை வெடி வைத்து தகர்ப்பது போன்ற காரணங்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் நில அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாகவும், முல்லைப்பெரியாறு அணை உள்ளிட்ட அணைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. எதிர்ப்பு தெரிவிக்கும் சுற்றுச்சூழல் ஆய்வாளர்களும் அணைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சர்வதேச ஆய்வு அமைப்பு ஒரு விவரத்தை வெளியிட்டது. அதில் கடந்த 150 ஆண்டுகளில் ஏற்பட்ட நில நடுக்கங்களில் 746 நிலநடுக்கங்கள் மனிதர்களால் தூண்டப்பட்டவை என்றும், இதில் 27 சதவீதம் சுரங்கங்கள் தோண்டுவதால் தூண்டப்பட்டது என்றும் தெரிவித்துள்ளது. அந்த அடிப்படையில் தான், மலையை குடைந்து சுரங்கம் அமைக்கும்போது நில அதிர்வுகள் ஏற்படும் என்ற அச்சம் சுற்றுச்சூழல் ஆய்வாளர்களிடம் ஏற்பட்டுள்ளது.

நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்க உள்ள அம்பரப்பர் மலையை சுற்றிலும் சுமார் 12 அணைக்கட்டுகள் உள்ளன. பொட்டிப்புரத்தில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் இடுக்கி அணை அமைந்து உள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக திகழும் முல்லைப்பெரியாறு அணை, சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மேகமலையில் 5 அணைகள் உள்ளன.முல்லைப்பெரியாறு அணை, இடுக்கி அணை உள்ளிட்ட 12 அணைகளுக்கும், ஆய்வுக்கூடத்துக்காக பாறைகளை வெடிவைத்து தகர்க்கும் போது பாதிப்பு ஏற்படும் என்று பொதுமக்களிடையே அச்சம் உள்ளது.

இதுகுறித்து உத்தமபாளையத்தை சேர்ந்த இயற்பியல் துறை பேராசிரியர் திருமலைச்சாமியிடம் கேட்டபோது, ‘பாறைகளை வெடிவைத்து தகர்க்கும் போது இயல்பாகவே நில அதிர்வு ஏற்படும். இதேநேரத்தில் இத்தனை பெரியமலையை குடைவதற்கு பல ஆயிரம் டன் வெடி மருந்துகள் பயன்படுத்த வாய்ப்புள்ளது. இதனால், நில அதிர்வுகள் அதிக அளவில் ஏற்படவும், அந்த நில அதிர்வுகளால் முல்லைப்பெரியாறு, இடுக்கி அணை போன்ற அணைகளுக்கு பாதிப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. முல்லைப்பெரியாறு அணை பகுதியில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு நில அதிர்வுகள் ஏற்பட்டன. இதனால், அணைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்று சொல்லப்பட்டதால், நில அதிர்வுகளை கணக்கிட அணை பகுதியிலும், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் நில அதிர்வை உணரும் கருவிகள் பொருத்தப்பட்டன. ஹைவேவிஸ் மலைப்பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பலர் பலியாகினர். அதன்பிறகு கம்பம் பள்ளத்தாக்கு பகுதியானது நில அதிர்வு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளாக கருதப்பட்டது. தற்போது, நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்க சுரங்கம் அமைப்பதால் மறைமுக பாதிப்புகள் அதிக அளவில் இருக்கும் என்ற அச்சம் உள்ளது’ என்றார். 

மேலும் செய்திகள்