அரசு போக்குவரத்து கழக அதிகாரியை வேனில் கடத்தி தாக்குதல் டிரைவர் உள்பட 4 பேருக்கு வலைவீச்சு

அரசு போக்குவரத்து கழக அதிகாரி, வேனில் கடத்தி தாக்கப்பட்டார். இதுதொடர்பாக டிரைவர் உள்பட 4 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Update: 2018-03-28 22:15 GMT
களியக்காவிளை,

குழித்துறை ஜங்ஷனில் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் கனகவல்லி மற்றும் குழித்துறை பணிமனை கிளை மேலாளர்கள் சுந்தர்சிங் மற்றும் ஸ்டாலின் ஆகியோர் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த ஒரு வேன், அரசு பஸ்சை முந்தியபடி வந்து நின்றது. பின்னர் அரசு பஸ்சில் ஏற முயன்ற பயணிகளை வழிமறித்து, வேனில் ஏறுமாறு டிரைவர் ராஜேஷ்குமார் (வயது 30) என்பவர் பயணிகளை ஏற்றியதாக தெரிகிறது. இதனை பார்த்த பணிமனை கிளை மேலாளர் சுந்தர்சிங், வேனில் ஏறி பயணிகளை இறக்குவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டார். மேலும் டிரைவர் ராஜேஷ்குமாரை எச்சரித்து வேனை, போலீஸ் நிலையம் நோக்கி ஓட்டிச் செல்லுமாறு வலியுறுத்தினார்.

ஆனால் ஆத்திரமடைந்த ராஜேஷ்குமார், வேனை போலீஸ் நிலையம் நோக்கி ஓட்டி செல்லாமல், வெட்டுமணி வழியாக இயக்கினார். மேலும் செல்லும் வழியில் 3 நபர்களை செல்போன் மூலம் வரவழைத்து வேனில் ஏற்றினார்.

இதனையடுத்து கிளை மேலாளர் சுந்தர்சிங்கை அவர்கள் சரமாரியாக தாக்கினர். இதற்கிடையே அரசு போக்குவரத்து கழக அதிகாரியை வேனில் கடத்தி செல்வதாக மற்ற அதிகாரிகள் புதுக்கடை, களியக்காவிளை போலீஸ் நிலையத்தை தொடர்பு கொண்டு உஷார்படுத்தினர். இந்தநிலையில் வேனை முன்சிறை அருகே நடுவழியில் நிறுத்தி விட்டு ராஜேஷ் குமார் உள்பட 4 பேரும் தப்பி ஓடி விட்டனர்.

மேலும் இதுதொடர்பாக களியக்காவிளை போலீசார், 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடிவருகின்றனர். அரசு போக்குவரத்து கழக அதிகாரி வேனில் கடத்தி தாக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்