கடன் தொல்லையால் குடும்பமே தற்கொலை: விஷம் குடித்த தாய், மகள் சிகிச்சை பலனின்றி சாவு

கடன் தொல்லையால் விஷம் குடித்த தாய், மகள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர்.

Update: 2018-03-28 23:00 GMT
மன்னார்குடி,

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி- மதுக்கூர் சாலையை சேர்ந்தவர் தமிழரசி (வயது 30). இவருடைய மகன் ஷியாம் (11), மகள் மனிஷா (9). தமிழரசியின் கணவர் இறந்துவிட்டதால் தமிழரசி தனது மகன், மகளுடன் வசித்து வந்தார். கடன் தொல்லை காரணமாக தமிழரசி மகன் மற்றும் மகளுக்கு எலி மருந்தை (விஷம்) கொடுத்து, தானும் விஷத்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் ஆபத்தான நிலையில் இருந்த 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

தாய், மகள் சாவு

இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 26-ந்தேதி சிறுவன் ஷியாம் பரிதாபமாக இறந்தான். தமிழரசி, மனிஷா ஆகியோருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி தமிழரசி, மனிஷா ஆகிய 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து மன்னார்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடன் தொல்லையால் குடும்பமே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகள்