கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெண் தர்ணா போராட்டம்

பண மோசடி குறித்த புகார் மனுவை திரும்ப பெறும்படி வற்புறுத்தும் பெண் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெண் ஒருவர் நேற்று கோவை கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

Update: 2018-03-28 23:15 GMT
கோவை,

கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் சுமையா சையத் (வயது 30). இவர் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தார். அப்போது திடீரென கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து அவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த ரேஸ்கோர்ஸ் போலீசார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சுமையா சையத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் அவர் ஒரு மனு அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

எனது பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் ஒருவர் என்னிடம் ரூ.7 லட்சம் வரை பணத்தை பெற்றுக்கொண்டு, அதனை திருப்பி தராமல் ஏமாற்றி வருகிறார். இந்த பண மோசடி குறித்து முதலில் கோவை குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தேன். அவர்கள் மாவட்ட வணிக குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளிக்கும்படி கூறினர்.

இதனை தொடர்ந்து நான் மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தேன். அவர், இதுகுறித்து வணிக குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க உத்தரவிட்டார். அங்கு பணிபுரியும் பெண் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் நான் அளித்த புகார் மனு குறித்து விசாரிக்க என்னிடம் பணம் கேட்டனர். இதனால் நான் பல தவணைகளில் ரூ.1 லட்சம் வரை அவர்களிடம் பணம் வழங்கி உள்ளேன்.

ஆனால் பணத்தை பெற்றுக்கொண்ட போலீசார் தற்போது நான் கொடுத்த புகாரை திரும்ப பெறும்படி வற்புறுத்தி வருகின்றனர். இல்லையென்றால் என் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்வதாக அவர்கள்கூறுகின்றனர். மேலும் சிலர் செல்போனில் தொடர்பு கொண்டும் என்னை மிரட்டுகின்றனர்.

எனவே என்னிடம் பணத்தை பெற்றுக்கொண்டதுடன், நான் அளித்த புகார் மனுவை திரும்ப பெறும்படி வற்புறுத்தும் பெண் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்