வனஉயிரின சட்டத்தை அமல்படுத்தக்கோரி சப்-கலெக்டர் அலுவலகத்தில் மலைவாழ் மக்கள் காத்திருப்பு போராட்டம்

வன உயிரின சட்டத்தை அமல்படுத்த கோரி சப்-கலெக்டர் அலுவலகத்தில் மலைவாழ் மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-03-28 22:45 GMT
பொள்ளாச்சி,

தமிழகத்தில் வன உரிமை சட்டம் 2006-யை அமல்படுத்த கோரியும், வன உரிமை சட்டத்தின்படி பழங்குடியின மக்களுக்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 ஏக்கர் விவசாய நிலம் வழங்கவும், புலிகள் காப்பகங்கள் பெயரால் விளை நிலங்கள் வழங்க மறுக்கிற போக்கை கைவிடவும் வேண்டும். வனக்கிராமங்களில் உள்ள பழங்குடியின மக்கள் வீடுகளுக்கு மின் இணைப்பு உடனடியாக வழங்க வேண்டும்.

கழிம்புதண்ணி ஊத்துப்பகுதியில் உள்ள பூர்விக விளை நிலங்களை ஜே.ஜே. நகர், கோபால்பதி, புலையன் இன மக்களுக்கு ஒப்படைக்க வேண்டும். பழங்குடியின மக்கள் வசிக்கிற குடியிருப்புகளில் புதிய தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்கவும், சாலை, குடிநீர், பொதுக்கழிப்பிட வசதிகள் போன்றவற்றை உடனே செய்து கொடுக்க வேண்டும். பழங்குடியின மக்கள் சாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த ஒரிரு வாரங்களில் விசாரணை செய்து, சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் பரமசிவம் தலைமை தாங்கினார். செயலாளர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். அகில இந்திய விவசாய சங்க பொதுச்செயலாளர் சண்முகம், மலைவாழ் மக்கள் சங்க மாநில தலைவர் டில்லிபாபு ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள். இதில் விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பழனிசாமி, மலைவாழ் மக்கள் சங்க மாநில செயலாளர் செல்வம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா செயலாளர் மகாலிங்கம், கோவை மாவட்டக்குழு உறுப்பினர் துரைசாமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. அதன்பிறகு சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் சந்திரன், தாசில்தார் செல்வபாண்டி மற்றும் குடிநீர் வடிகால் வாரியம், வனத்துறை, கோட்டூர் பேரூராட்சி, வருவாய் துறை உள்பட அனைத்து அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது அடுத்த மாதம் 15 முதல் 20-ந்தேதிக்குள் மீண்டும் அனைத்துறை அதிகாரிகளை வரவழைத்து கூட்டம் நடத்தி முடிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் ஒத்துக்கொண்டு போராட்டத்தை முடித்து கொள்வதாக அறிவித்தனர்.

மேலும் அடுத்த மாதம் நடக்கும் பேச்சுவார்த்தையில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்தக்கட்ட போராட்டம் நடத்தப்படும் என்று நிர்வாகிகள் தெரிவித் தனர்.

காலை 11 மணிக்கு தொடங்கிய உள்ளிருப்பு போராட்டம் மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. இதையொட்டி சப்-கலெக்டர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 

மேலும் செய்திகள்