ஈரோடு கூட்டுறவு சங்க தேர்தல் மனு நிராகரிப்பால் வேட்பாளர்கள் பட்டியலை கிழித்த அ.தி.மு.க.வினர்
ஈரோட்டில் கூட்டுறவு சங்க தேர்தலில் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதால் அ.தி.மு.க.வினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ஈரோடு,
ஈரோட்டில் கூட்டுறவு சங்க தேர்தலில் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதால், ஒட்டப்பட்ட வேட்பாளர்கள் பட்டியலை அ.தி.மு.க.வினர் கிழித்து எறிந்தனர். மேலும் அ.தி.மு.க.வினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் 4 கட்டங்களாக நடத்தப்படுகிறது. அதன்படி முதல் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் நடைபெற்றது. ஈரோடு வீரப்பன்சத்திரம் விசைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தில் கடந்த முறை தலைவராக இருந்த அ.தி.மு.க. நிர்வாகி எம்.ஜி.பழனிசாமியும், அவருடன் சேர்ந்து என்.நந்தகோபால், சென்னியப்பன், எம்.சி.பழனிசாமி, அமுதா, கலாமணி, முத்துசாமி என மொத்தம் 7 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து இருந்தனர்.
இதேபோல் அ.தி.மு.க.வை சேர்ந்த நல்லசாமி, தர்மலிங்கம், சண்முகபிரியா, சண்முகம், மனோகரன் உள்பட 6 பேர் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தனர். இவர்களுடைய வேட்பு மனு பரிசீலனை நேற்று நடைபெற்றது. இதனால் இருதரப்பை சேர்ந்தவர்களும் சங்க அலுவலகம் முன்பு கூடிஇருந்தனர்.
இந்தநிலையில் மாலை 5 மணிஅளவில் வேட்பாளர்கள் பட்டியல் அலுவலகம் முன்பு ஒட்டப்பட்டது. அதில் நல்லசாமி மற்றும் அவர்களுடன் வேட்பு மனுதாக்கல் செய்த மொத்தம் 6 பேரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தது. இதனால் எம்.ஜி.பழனிசாமி தலைமையில் வேட்புமனுதாக்கல் செய்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். எனவே அவர்கள் வேட்பு மனுவை நிராகரிப்பு செய்ததற்கான காரணத்தை கேட்டனர். மேலும் எம்.ஜி.பழனிசாமிக்கு ஆதரவாக ஈரோடு மாநகராட்சி முன்னாள் துணை மேயர் கே.சி.பழனிசாமி ஆதரவாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதுமட்டுமின்றி அங்கிருந்த அ.தி.மு.க.வினர் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டிருந்த வேட்பாளர் பட்டியலையும் கிழித்து எறிந்தனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த வீரப்பன்சத்திரம் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினார்கள். ஆனால் கட்சியினர் தொடர்ந்து அங்கேயே நின்றுகொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அவர் களை அங்கிருந்து போலீசார் வெளியேற்றினார்கள். அப்போது கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அவர்களை அங்கிருந்து வெளியேற்றி சங்க அலுவலக கதவை போலீசார் மூடினார்கள்.
இதுகுறித்து முன்னாள் துணை மேயர் கே.சி.பழனிசாமி கூறியதாவது:-
எங்கள் தரப்பில் வேட்புமனு தாக்கல் செய்த 7 பேரின் மனுக்களை நிராகரிப்பு செய்து உள்ளனர். இதுதொடர்பாக விளக்கம் கேட்டால் அதிகாரிகள் முறையான விளக்கம் கொடுக்க மறுக்கிறார்கள். எங்கள் கட்சியை சேர்ந்த (அ.தி.மு.க. பிரமுகர்) ஒருவரின் தம்பி என்பதால் அவர்களுடைய வேட்புமனு மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது. இது கண்டிக்கத்தக்கது. இதுதொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.
இதேபோல் ஈரோடு விசைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்க தேர்தலுக்கு அ.தி.மு.க. சார்பில் கேசவமூர்த்தி, கமலம், சம்பூர்ணம், விஸ்வநாதன், ஆனந்தன், ஜெயராமன், கலையரசன் ஆகிய 7 பேரும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கடந்த முறை தலைவராக இருந்த சக்தி என்கிற சிவசுப்பிரமணி உள்பட 7 பேரும் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தனர். அவர்களுடைய வேட்பு மனுக்கள் நேற்று பரிசீலனை செய்யப்பட்டன.
இதில் பங்கேற்பதற்காக அ.ம.மு.க.வை சேர்ந்தவர்கள் சங்க அலுவலகத்திற்கு சென்றனர். ஆனால் அவர்களை அனுமதிக்காமல் சங்க அலுவலக கதவை அதிகாரிகள் மூடினார்கள். மேலும், அங்கு நெசவாளர்கள் பலர் திரண்டு வந்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது. இதைத்தொடர்ந்து வீரப்பன்சத்திரம் போலீசார் அங்கு விரைந்து சென்று, அங்கிருந்தவர்களை வெளியேற்றினார்கள். அதன்பின்னர் வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் மட்டுமே அங்கு நின்றிருந்தனர்.
மாலை 5 மணிஅளவில் அலுவலக கதவு திறக்கப்பட்டு வேட்பாளர்கள் பட்டியல் ஒட்டப்பட்டது. அதில் கேசவமூர்த்தியுடன் வேட்பு மனு தாக்கல் செய்த மொத்தம் 7 பேரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தது. இதனால் அ.ம.மு.க.வினர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன்பின்னர் அங்கிருந்தவர்களை போலீசார் சமாதானம் செய்து வெளியேற்றினார்கள். இந்த சம்பவங்களினால் ஈரோட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.