நகை பறித்தவர்கள் என தவறான படத்தை வெளியிட்ட போலீசார் - சம்பந்தப்பட்ட வாலிபர்கள் நேரில் வந்து வாக்குவாதம்
தவறான படத்தை வெளியிட்ட போலீசாருடன் சம்பந்தப்பட்ட வாலிபர்கள் நேரில் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பனப்பாக்கம்,
பனப்பாக்கம் அருகே நகைபறிப்பின்போது பெண் சுகாதார ஆய்வாளர் பலியான சம்பவத்தையடுத்து அவரிடம் நகை பறித்தவர்கள் என்ற சந்தேகத்தில் போலீசார் வெளியிட்ட புகைப்படம் தவறானதாக இருந்ததால் சம்பந்தப்பட்ட வாலிபர்கள் போலீஸ் நிலையத்திற்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை சிப்காட் பகுதியை சேர்ந்தவர் வீராசாமி. இவரது மனைவி மல்லிகா (வயது 50). பாணாவரம் அருகே உள்ள புதுப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 19-ந் தேதி வேலை முடிந்ததும் தனது கணவர் வீராசாமியுடன் பாணாவரம் வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். மாங்குப்பம் தைலமர தோப்பு அருகே சென்று கொண்டிருந்தபோது அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிளை பின்தொடர்ந்து 2 பேர் ஒரு மோட்டார்சைக்கிளில் வந்தனர்.
அவர்கள் திடீரென மல்லிகா கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றுவிட்டனர். கொள்ளையர்கள் நகையை பறித்ததில் நிலைதடுமாறிய வீராசாமி, மல்லிகா ஆகிய இருவரும் மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர். இதில் மல்லிகாவுக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து வீராசாமி, பாணாவரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் வழக்குப்பதிவு செய்து, நகையை பறித்துக்கொண்டு மோட்டார்சைக்கிளில் தப்பிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார். தனிப்படை அமைத்தும் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் மல்லிகாவிடம் நகைபறித்ததாக கொள்ளையர்கள் என்று கூறி மோட்டார்சைக்கிளில் சென்ற 2 பேரின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டு, அவர்கள் பற்றி துப்பு கொடுத்தால் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தனர்.
போலீசார் கொடுத்த புகைப்படம் அனைத்து பத்திரிகைகளிலும் கடந்த 24-ந் தேதி வெளியானது. இதைப்பார்த்ததும், அந்த புகைப்படத்தில் இருக்கும் 2 வாலிபர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனே அவர்கள் இருவரும் பாணாவரம் போலீஸ் நிலையத்திற்கு சென்றுள்ளனர். அங்கு பணியில் இருந்த போலீசாருடன் அவர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது நாங்கள் பக்கத்து கிராமத்தை சேர்ந்தவர்கள், நகைபறிப்புக்கு சம்பந்தமே இல்லாத எங்கள் புகைப்படத்தை எப்படி வெளியிடலாம் என்று கேட்டுள்ளனர். அதன்பிறகே தாங்கள் வெளியிட்டது தவறான புகைப்படம் என்பதை போலீசார் உணர்ந்துள்ளனர். உடனே அவர்களை போலீசார் சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர். இந்த சம்பவத்தால் பாணாவரம் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.