தர்மபுரி மாவட்டத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் வேட்பு மனுக்கள் தள்ளுபடியான வேட்பாளர்கள் போராட்டம்

தர்மபுரி மாவட்டத்தில் 3 இடங்களில் கூட்டுறவு சங்க தேர்தல் வேட்புமனுக்கள் தள்ளுபடியான வேட்பாளர்கள் போராட்டம் நடத்தினர். அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-03-27 23:00 GMT
ஏரியூர்,

தர்மபுரி மாவட்டம் நெருப்பூர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க தேர்தலில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க தேர்தலில் போட்டியிட 30 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். தேர்தல் அதிகாரி சிவப்பிரகாசம் வேட்புமனுக்களை பரிசீலனை செய்தார்.

இந்தநிலையில் தேர்தலில் தி.மு.க., பா.ம.க ஆகிய கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதன்காரணமாக சம்பந்தப்பட்ட வேட்பாளர்களுக்கும், தேர்தல் நடத்தும் பிரிவை சேர்ந்த அலுவலர்களுக்கும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் தேர்தல் அதிகாரி புறப்பட்டு சென்றார். அனைவரின் முன்னிலையில் மீண்டும் மனுக்களை பரிசீலனை செய்து அறிவிக்க வேண்டும் எனக் கூறி வேட்புமனு தள்ளுபடியானவர்கள் மற்றும் அவர்களுடைய ஆதரவாளர்கள் பரிசீலனை நடந்த அலுவலக வளாகத்தை முற்றுகையிட்டு வலியுறுத்தினார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல் காரிமங்கலம் அருகே உள்ள காலப்பனஅள்ளியில் உள்ள கூட்டுறவு சங்க தேர்தலில் போட்டியிட 43 பேர் வேட்பு மனுதாக்கல் செய்தனர். இவர்களில் 11 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. மீதமுள்ள 32 பேரின் வேட்புமனுக்கள் நிரகரிக்கப்பட்டன. இதை கண்டித்து வேட்புமனு தள்ளுபடியானவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மாட்லாம்பட்டி பகுதியில் உள்ள சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

நல்லம்பள்ளி அருகே பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இந்த கடன் சங்க வங்கியின் நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் உள்பட 50 பேர் மனு தாக்கல் செய்தனர். வேட்புமனுக்கள் பரிசீலனை பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வங்கியில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் நேற்று நடந்தது. பெறப்பட்ட 50 வேட்புமனுக்களில் தகுதி வாய்ந்த வேட்பாளர்களாக 3 பெண்கள் உள்பட 11 பேர் கொண்ட பட்டியல் வங்கியின் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டது. வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டவர்கள் அங்கு திரண்டு தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீஸ் துணை சூப்பிரண்டு காந்தி தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டனர். வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களில் சிலரை போலீசார் அழைத்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்