கருமத்தம்பட்டி அருகே கொலை செய்யப்பட்ட வாலிபர் அடையாளம் தெரிந்தது, கள்ளக்காதல் விவகாரத்தில் நண்பர்களே தீர்த்துக்கட்டியது அம்பலம்

கருமத்தம்பட்டி அருகே கொலை செய்யப்பட்ட வாலிபர் அடையாளம் தெரிந்தது. கள்ளக்காதல் விவகாரத்தில் அவருடைய நண்பர்களே தீர்த்துக்கட்டியது தெரியவந்தது.

Update: 2018-03-27 22:30 GMT
கருமத்தம்பட்டி,

கோவையை அடுத்த சோமனூர் அருகே மாதப்பூர் பகுதியில் கடந்த 17-ந் தேதி உடலில் காயங்களுடன் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணம் கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கருமத்தம்பட்டி போலீசார் பிணத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். பிணமாக கிடந்த வாலிபரின் உடலில் ரத்த காயங்கள் இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டு இறந்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி உத்தரவின்பேரில் கருமத்தம்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். மேலும் பிணமாக கிடந்தவர் அணிந்திருந்த பனியனில் ஒரு தனியார் நிறுவனத்தின் பெயர் பொறிக்கப்பட்டு இருந்தது. இதனை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதில் அவர் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த வீரக்குமார் என்பவருடைய மகன் அஜித்குமார் (வயது 30) என்பதும், அவர் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

தொடர்ந்து நடந்த விசாரணையில் அஜித்குமாரை அவருடைய நண்பர்களான கணியூரில் வசித்து வரும் மணிகண்டன் (34), இன்பராஜ் (28) ஆகியோர் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து நேற்று அவர்கள் 2 பேரையும் போலீசார் கைதுசெய்தனர். தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், மணிகண்டன் நெல்லை மாவட்டம் ஆலங்குளம் பகுதியை சேர்ந்தவர் என்பதும், இன்பராஜ் தஞ்சாவூர் மாவட்டம் பாபாநாசத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இதில் மணிகண்டன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நாகை மாவட்டத்தில் ஒரு திருட்டு வழக்கில் கைதுசெய்யப்பட்டு, நாகை சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அப்போது மற்றொரு திருட்டு வழக்கில் கைதாகி அதே சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அஜித்குமாருக்கும், மணிகண்டனுக்கும் இடையே நட்பு ஏற்பட்டு நண்பர்களாக பழகி உள்ளனர்.

பின்னர் இவர்கள் 2 பேரும் சிறையில் இருந்து வெளியே வந்தனர். மணிகண்டன் கோவை கணியூரில் கறிக்கோழி வியாபாரம் செய்து வந்துள்ளார். அஜித்குமார் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வந்துள்ளார். இந்தநிலையில் மணிகண்டனின் நண்பனான இன்பராஜ், குமாரபாளையத்தில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர்கள் 3 பேரும் அடிக்கடி சந்தித்து மது அருந்தி வந்துள்ளனர்.

மேலும் மணிகண்டன் வீட்டிற்கு அஜித்குமார் அடிக்கடி வந்து சென்றுள்ளார். இந்தநிலையில் மணிகண்டனுக்கு அந்த பகுதியில் உள்ள ஒரு பெண்ணுடன் கள்ளக்காதல் ஏற்பட்டு உள்ளது. அந்த பெண்ணுடன் மணிகண்டன் மூலம் அஜித்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டது. இதைதொடர்ந்து அந்த பெண் அஜித்குமாரிடம் நெருங்கி பழகி வந்துள்ளார். இதனை அறிந்த மணிகண்டன் ஆத்திரம் அடைந்தார்.அத்துடன் அஜித்குமாரிடம் பேசுவதையும் தவிர்த்து வந்துள்ளார்.

கடந்த 26-ந் தேதி அஜித்குமார், மணிகண்டன் வீட்டிற்கு வருவதாக கூறி உள்ளார். அதற்கு மணிகண்டன் வீட்டிற்கு வரவேண்டாம் நாம் எங்காவது வெளியில் சென்று மது அருந்தலாம் என்று கூறி உள்ளார். பின்னர் மணிகண்டனை கருமத்தம்பட்டி அருகே உள்ள மாதப்பூர் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். அங்கு இன்பராஜும் சென்று உள்ளார். பின்னர் அவர்கள் 3 பேரும் மது அருந்தி உள்ளனர். அப்போது அவர்களுக்குள் கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக தகராறு ஏற்பட்டு உள்ளது.

இதில் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளை எடுத்து அஜித்குமாரை வெட்டினார். அப்போது அஜித்குமார் தப்பி ஓட முயன்றுள்ளார். அவரின் காலை இன்பராஜ் பிடித்து உள்ளார். பின்னர் மணிகண்டன் அஜித்குமாரை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அவருடைய செல்போனை எடுத்துக்கொண்டு தப்பியுள்ளனர்.

இவ்வாறு கைதானவர்கள் வாக்குமூலத்தில் தெரிவித்து உள்ளனர்.

தீவிரமாக துப்பு துலக்கி குற்றவாளிகளை பிடித்த தனிப்படை போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர். 

மேலும் செய்திகள்