கர்நாடகா-கேரள எல்லை வனப்பகுதியில் துப்பாக்கிகளுடன் நக்சல் தடுப்பு போலீசார் தீவிர ரோந்து

கர்நாடகா- கேரள எல்லையோர வனப்பகுதியில் தமிழக நக்சல் தடுப்பு போலீசார் நவீன ரக துப்பாக்கிகளுடன் திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

Update: 2018-03-27 22:00 GMT
கூடலூர்,

கேரள-கர்நாடகா மற்றும் தமிழக எல்லையோர வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தமிழக எல்லையான கூடலூர் பகுதியில் உள்ள நியூகோப், தேவாலா, மசினகுடி, சேரம்பாடி, நெலாக்கோட்டை என வனப்பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு பாதுகாப்பு சுவர் கட்டப்பட்டு கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மாவோயிஸ்டுகள் திடீரென நுழைந்து தாக்குதல் நடத்தாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழக நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் கேரள- கர்நாடகா மற்றும் கூடலூர், பந்தலூர் தாலுகா வனப்பகுதிகளில் திடீர் ரோந்து சென்று கண்காணிப்பை தீவிரப்படுத்தி வருகின்றனர். தற்போது கோடை காலம் என்பதால் வனங்களில் கடும் வறட்சி நிலவுகிறது. நீர்நிலைகள் வறண்டு வருவதால் மாவோயிஸ்டுகள் தினமும் வேறு இடங்களை தேடி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள நீர்நிலைகளை ஒட்டி மாவோயிஸ்டுகள் பதுங்கி இருக்க வாய்ப்பு உள்ளது.

இதனை கருத்தில் கொண்டு கேரள- கர்நாடகா மாநிலங்களின் எல்லையோரம் கூடலூர் வனப்பகுதிகளில் தமிழக நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் நவீன ரக துப்பாக்கிகளை ஏந்தியவாறு திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வனத்தில் எங்கும் புகை பரவுகிறதா? அல்லது மனிதர்கள் நடமாட்டம் எதுவும் தென்படுகிறதா? என கண்காணித்தனர். இதேபோல் முக்கிய நீர்நிலைகளின் கரையோரம் முகாமிட்டு சந்தேகப்படும்படி யாராவது பதுங்கி உள்ளார்களா? என நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.

ஆனால் அதற்கான தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை. மேலும் வனப்பகுதிகளில் வசிக்கும் ஆதிவாசி மக்களை சந்தித்து சந்தேகப்படும்படி அடையாளம் தெரியாத நபர்கள் நடமாட்டம் உள்ளதா? என விசாரித்தனர். அப்போது ஆதிவாசி மக்கள் வனத்துக்குள் யாரும் வரவில்லை என தெரிவித்தனர். இருப்பினும் சந்தேக நபர்களின் நடமாட்டம் இருந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தினர். இதனை ஆதிவாசி கிராம மக்கள் ஏற்று கொண்டனர்.

இது குறித்து நக்சல் தடுப்பு போலீசாரிடம் கேட்டபோது, கோடை காலம் என்பதால் வனத்தில் திடீர் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்களும் நக்சல் பற்றிய தகவல் தெரிந்தால் போலீசாரிடம் தெரிவிக்கலாம். பெயர், விவரம் ரகசியம் காக்கப்படும் என்றனர். 

மேலும் செய்திகள்