குன்னூர் அருகே கார் ஓட்டி பழகிய போது விபத்து: 70 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து பெண் பலி

குன்னூர் அருகே கார் ஓட்டி பழகிய போது 70 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து பெண் பலியானார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2018-03-27 22:00 GMT
குன்னூர்,

குன்னூர் அருகே உள்ள கேத்தி பகுதியில் வசித்து வருபவர் அப்துல் ரஹீம். வியாபாரி. இவருடைய மனைவி ரேஷ்மா (வயது 34). இவர்களுக்கு ஷமீர் (12) என்ற மகன் உண்டு. அப்துல் ரஹீமின் மனைவி ரேஷ்மா கார் ஓட்டி பழக விரும்பினார்.இதை தொடர்ந்து ரேஷ்மா தனது கணவர் காரை ஓட்டி பழகி வந்தார். இவருக்கு ஊட்டியை சேர்ந்த கார் ஓட்டும் பயிற்சியாளர் ஷாஜி(40) என்பவர் பயிற்சி கொடுத்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் ரேஷ்மா தனது கணவர் காரை எடுத்து ஓட்டி பழகும் முயற்சியில் ஈடுபட்டார். அவருக்கு கார் பயிற்சியாளர் ஷாஜி பயிற்சி அளித்து கொண்டு இருந்தார். காரின் பின்பக்கத்தில் ரேஷ்மாவின் மகன் ஷமீர் உட்கார்ந்திருந்தார்.

கார் கேத்தியில் இருந்து கெக்கட்டிஹாடா என்ற இடத்தில் வளைவில் திரும்பிய போது ரேஷ்மாவின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் கண் இமைக்கும் நேரத்தில் தாறுமாறாக ஓடிய கார் சாலையோரம் இருந்த 70 அடி பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்தது.

கார் கீழே விழுந்ததில் சுக்குநூறாக நொறுங்கியது. காரின் இடிபாடுக்குள் சிக்கியவர்கள் அலறினார்கள். இவர்களது அலறல் சத்தத்தை கேட்டு அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து காரின் இடிபாடுக்குள் சிக்கி உயிருக்கு போராடிய 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ரேஷ்மாவை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

படுகாயம் அடைந்த மற்ற 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கார் ஓட்ட பழகிய தன் மனைவி இறந்ததை அறிந்து அப்துல்ரகீம் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் கேத்தி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரேஷ்மா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விபத்து குறித்து விசாரணை நடத்தினார்கள். 

மேலும் செய்திகள்