காடுகளில் தண்ணீரின்றி ஊருக்குள் புகும் மான்கள் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் பரிதாபம்

வனப்பகுதியில் தண்ணீர் இல்லாததால் மான்கள் ஊருக்குள் புகுந்து வருகின்றன. அவ்வாறு வரும் மான்கள் விபத்தில் சிக்கி உயிரிழப்பது அதிகரித்துள்ளது.

Update: 2018-03-27 22:15 GMT
கல்லல்,

சிவகங்கை மாவட்டத்தில் பனங்குடி, மண்மலைமேடு, கல்லல் வனத்துறை காடு, பாகனேரி, மதகுபட்டி, தேவகோட்டை சங்கரபதி கோட்டை காடு, திருப்பத்தூரை அடுத்த கண்டவராயன்பட்டி காடு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வனப்பகுதிகள் உள்ளன. இந்த வனப்பகுதியில் மான்கள் அதிக அளவில் வசித்து வருகின்றன. மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பருவமழை போதிய அளவு பெய்யாததால் தொடர்ந்து வறட்சியான சூழ்நிலையே நிலவி வருகிறது. கோடைகாலம் என்றாலே மக்கள் தண்ணீருக்கு போராடும் நிலை உள்ளது. இந்தநிலையில் சமீப காலமாக வனப்பகுதியில் உள்ள மான், முயல்கள் உணவு தேடியும், தண்ணீர் தேடியும் அடிக்கடி ஊருக்குள் புகுந்து வருவது தொடர்கதையாகி வருகிறது.

அவ்வாறு தண்ணீர் தேடி ஊருக்குள் புகும் மான்கள் வாகனங்களில் அடிபட்டும், நாய்கள் கடித்தும் பரிதாபமாக இறந்துபோகின்றன. இதுதவிர முயல்களும் அடிக்கடி ஊருக்குள் புகுந்து வருவதுடன், அவையும் வாகனத்தில் அடிபட்டு இறந்துபோகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்பு காரைக்குடியை அடுத்த செட்டிநாடு பகுதியில் ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற தாய் மான் தனது குட்டியுடன் ரெயிலில் அடிபட்டு பரிதாபமாக இறந்துபோனது. இதேபோல் சிவகங்கையை அடுத்த மதகுபட்டி பகுதியில் சாலையை கடக்க முயன்ற மான் ஒன்றும், தேவகோட்டையில் ஒரு மானும், திருப்பத்தூர் பகுதியில் ஒரு மானும் என கடந்த ஒருவாரத்தில் மட்டும் 5 மான்கள் பலியாகி உள்ளன.

இதற்கிடையில் நேற்று நெடுமரம் பகுதியில் ஒரு மானும், காரைக்குடியை அடுத்த தென்கரை பகுதியில் ஒரு மானும் வாகனத்தில் அடிபட்டு இறந்துபோனது.

மாவட்டத்தில் இந்த ஆண்டும் கடும் வறட்சி நிலவுகிறது. தண்ணீரின்றி பொதுமக்கள் அவதியடைந்து வரும் நிலையில் வன விலங்குகளும் தண்ணீர் கிடைக்காமல் இறந்து வருகின்றன. எனவே மான்கள் இறப்பை தவிர்க்க அவை அதிக அளவில் வசிக்கக்கூடிய வனப்பகுதியில் சோலார் மின் மோட்டார் பொருத்தி தரைமட்ட தண்ணீர் தொட்டி அமைத்து மான்களை பாதுகாக்க வேண்டும் என்று வனத்துறை அதிகாரிகளுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, காடுகளில் தண்ணீர் இல்லாததாலேயே மான்கள் ஊருக்குள் புகுந்து வருகின்றன. வனப்பகுதியில் சோலார் மோட்டார் பொருத்தி தரைமட்ட தண்ணீர் அமைக்க அரசு நிதி எதுவும் ஒதுக்கவில்லை. நிதி கிடைத்தால் மட்டுமே அதற்கான ஏற்பாடுகளை செய்ய முடியும் என்றனர். 

மேலும் செய்திகள்