திருப்பூர் காதுகேளாதோர் பள்ளி வழக்கு: முன்னாள் மாணவர்கள் பிச்சை எடுத்து போராட்டம்
திருப்பூர் காதுகேளாதோர் பள்ளி வழக்கிற்காக முன்னாள் மாணவர்கள் பிச்சை எடுத்து போராட்டம் நடத்தினர்.
திருப்பூர்,
திருப்பூர் அருகே முருகம்பாளையம் மற்றும் கோதபாளையத்தில் திருப்பூர் காதுகேளாதோர் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் அறக்கட்டளை நிர்வாகம் தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. பள்ளியின் நிர்வாக செயலாளராக இருந்த முருகசாமியிடம் பள்ளியை ஒப்படைக்க வேண்டும் எனக்கோரி முன்னாள் மாணவ-மாணவிகள் நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். ஆனால் இதுதொடர்பான வழக்கு கோர்ட்டில் உள்ளதால் கோர்ட்டு மூலமாக தீர்வு காண வேண்டும் என கூறி அதிகாரிகள் திருப்பி அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் காதுகேளாதோர் பள்ளியின் முன்னாள் மாணவ-மாணவிகள் 50-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று மதியம் திருப்பூர் குமரன் சிலை முன்பு திரண்டனர். மாணவ-மாணவிகள் கைகளில் உண்டியல் ஏந்தி அப்பகுதியில் உள்ள கடைகள், பொதுமக்களிடம் பிச்சை எடுக்கும் நூதன போராட்டத்தை நடத்தினார்கள். மாணவர்கள் கையில் ஏந்திய பதாகைகளில், ‘காது கேளாதோர் பள்ளி தொடர்பான வழக்கை கோர்ட்டில் நடத்துவதற்கான செலவுக்காக நாங்கள் பிச்சை எடுக்கிறோம். எங்களுக்கு உதவுங்கள்’ என்று வாசகங்களை எழுதியிருந்தனர். இதையறிந்த திருப்பூர் வடக்கு போலீஸ் உதவி கமிஷனர் அண்ணாதுரை மற்றும் போலீசார் அங்கு வந்து மாணவ-மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.