மகன் இறந்த துக்கம் தாங்காமல் பெற்றோர் தற்கொலை

மகன் இறந்த துக்கம் தாங்காமல் பெற்றோர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

Update: 2018-03-27 23:30 GMT
திரு.வி.க நகர்,

சென்னை பெரம்பூரை அடுத்த பெரவள்ளூர் எஸ்.ஆர்.பி கோவில் தெற்கு சாலையை சேர்ந்தவர் ராமச்சந்திரன்(வயது 50). எலெக்ட்ரீசியனாக இருந்து வந்தார். இவர் காங்கிரஸ் கட்சியில் 67-வது வட்ட முன்னாள் தலைவர் ஆவார். இவரது மனைவி சாமுண்டீஸ்வரி(43). இவர்களுக்கு லோகேஷ்(23) என்ற மகன் இருந்தார்.

லோகேஷ் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார். அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். கடந்த மாதம் 19-ந்தேதி புற்றுநோய் காரணமாக அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தங்களது ஒரே மகன் இறந்ததை கணவன்-மனைவியால் தாங்கி கொள்ள முடியவில்லை. இருவரும் இதனை நினைத்தபடியே தினமும் கவலையில் ஆழ்ந்து வந்தனர். மனவேதனையால் சரியாக சாப்பிடாமலும், தூங்காமலும் அழுதபடியே இருந்தனர்.

நேற்று முன்தினம் இரவு ராமச்சந்திரனும், சாமுண்டீஸ்வரியும் வழக்கம்போல் மனக்கவலையுடன் தூங்க சென்றனர். நேற்று காலையில் சாமுண்டீஸ்வரியின் அண்ணன் தனசேகர் அங்கு வந்தார். நீண்ட நேரம் தட்டியும் கதவு திறக்கப்படவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த தனசேகர் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளார். அப்போது ராமச்சந்திரன் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

அவரது மனைவி சாமுண்டீஸ்வரி சமையலறையில் உள்ள மேற்கூரை கொக்கியில் சேலையால் தூக்குப்போட்டு இறந்து கிடந்தார். தனசேகர் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பெரவள்ளூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சிட்டிபாபு தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விரைந்து சென்றனர். கணவன்-மனைவி இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மகன் இறந்த துக்கம் தாங்காமலேயே இருவரும் உயிரிழந்தது தெரியவந்தது. மகன் இறந்த துக்கம் தாங்காமல் பெற்றோர் இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்