‘ரோபோனாட்’ செயற்கை நுண்ணறிவு கொண்ட விண்வெளி ரோபாட்டுகள்

நீங்கள் சொல்லும் வேலைகள் அனைத்தையும், என்ன ஏது என்று எதுவும் கேட்காமல், சொன்னது சொன்னபடி தட்டாமல் செய்யும் ஒரு சம்பளமில்லா உதவியாளர் இருக்கிறார் வேண்டுமா என்று யாராவது கேட்டால் நாம் என்ன சொல்வோம். கண்டிப்பாக வேண்டும் என்றுதான் சொல்வோம்.

Update: 2018-03-27 07:54 GMT
உலகின் பல வளர்ந்த நாடுகளில் ரோபாட் வடிவிலான அத்தகைய நேர்முக உதவியாளர்கள் வெகு வேகமாக தயாராகி வருகிறார்கள். சராசரியான வாழ்க்கை வாழும் நமக்கே ஒரு ரோபாட் உதவியாளர் இருந்தால் நன்றாக இருக்கும் எனும் பட்சத்தில், புவி ஈர்ப்பு விசை, ஆக்சிஜன் போன்ற எதுவுமே இல்லாத, வேற்று உலகமான விண்வெளியில், சர்வதேச விண்வெளி நிலையம்
(International Space Station, ISS)
போன்ற இடங்களில் தினசரி விண்வெளி தொடர்பான பல ஆய்வுகளை மேற்கொள்ளும் விண்வெளி ஆய்வாளர்களுக்கு ஒரு ரோபாட் உதவியாளர் இருந்தால் கண்டிப்பாக பேருதவியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

முக்கியமாக, மிகவும் ஆபத்தான தட்பவெப்பம் மற்றும் சுற்றுச்சூழலைக் கொண்ட நிலவு, செவ்வாய் கிரகம் போன்ற விண்வெளி பகுதிகளில் மனிதத்திறனுக்கு அப்பாற்பட்ட பல வேலைகளைச் செய்துமுடிக்க ரோபாட்கள் கண்டிப்பாக வேண்டும்.

உதாரணமாக, பிரபல ஹாலிவுட் திரைப்படமான ஸ்டார் வார்ஸ்-ல், ‘ஆஸ்ட்ரோமெக்’ (Astromechs) எனும் ஒரு ரோபாட்டை காண்பிப்பார்கள். அது அடிப்படையில், நட்சத்திரக் கப்பல்களில் ஏற்படக்கூடிய சீர்கேடுகள், சிக்கல்களை தானாகவே கண்டறிந்து சரிசெய்யும் எந்திர மனிதன் ஆகும். இது ‘ரிப்பேர் ட்ராய்டு’ வகையைச் சேர்ந்த ‘ஆட்டோமேட்டட் மெக்கானிக்’ போல செயல்படும்.

ரிப்பேர் தவிர, சண்டை போடுவது, ஒரு விண்கலத்தை ஓட்டுவது உள்ளிட்ட அனைத்து வகையான வேலைகளையும் ஆஸ்ட்ரோமெக் மேற்கொள்ளும். ஆனால், இந்த வகை ரோபாட்டுகளின் செயல்திறனுக்கு அவற்றின் வினோதமான உடலமைப்புதான் எதிரி.

ஏனெனில், ஆஸ்ட்ரோமெக் மேற்கொள்ளக்கூடிய பல செயல்களுக்கு அதன் உடலைப்பு ஒத்துழைப்பதில்லை. நாசாவில், ஆஸ்ட்ரோமெக் போன்ற ரோபாட்டுகளுக்கு கேர்டேக்கர் ரோபாட்டுகள்
(Caretaker robots)
என்று பெயர்.

ஆஸ்ட்ரோமெக் ரோபாட்டுகளின் செயல்திறனும், ஆனால் மனித உடலமைப்பும் கொண்ட ரோபோனாட் மற்றும் ரோபோனாட் 2 என இரண்டு ஹியூமனாய்டு ரோபாட்டுகளை வடிவமைத்து அவற்றை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு கொண்டுசென்று ஆய்வுகளை மேற்கொண்டது நாசா. இருப்பினும், ஆஸ்ட்ரோமெக் ரோபாட்டுகளுக்கு உள்ள பல்வேறு வகையான வேலைகளைச் செய்யும் செயல்திறன் இன்னும் ரோபோனாட்டுக்கு உருவாகவில்லை.

ஆனாலும், விண்வெளி ஆய்வுகளுக்கு தேவையான பல வேலைகள் மற்றும் விண்கலத்தை சீரமைப்பது உள்ளிட்ட சில முக்கியமான திறன்கள் மனித உருவம் கொண்ட ரோபோனாட்டுகளுக்கு ஏற்பட்டிருக்கின்றன என்கிறார் நாசா பொறியியலாளர் வெர்தேயான். இருந்தபோதும், அஸ்ட்ரோமெக் ரோபாட்டுகளுக்கு உள்ள படைப்புத்திறன் அல்லது கிரியேட்டிவிட்டி ரோபோனாட்டுகளுக்கு இன்னும் உருவாகவில்லை.

இதன் காரணமாக, எதிர்பாராத சிக்கல்கள், அல்லது புரோகிராம் செய்யப்படாத சில புதிய வகையான பிரச்சினைகள் விண்கலத்தில் ஏற்படும்போது, சுயமாக சிந்தித்து அவற்றை தன்னிச்சையாக சரிசெய்யும் திறன் ரோபோனாட் போன்ற விண்வெளி ரோபாட்டுகளுக்கு தற்போது இல்லை.

ஆனால் இத்தகைய சமயோசித புத்தி ரோபோனாட்டுக்கு மிகவும் அவசியம் என்றும், விண்வெளியில் எதிர்பாராத பல சிக்கல்கள் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம், அப்படி அவை நிகழும்போது அதை சரிசெய்யும் திறன் ரோபோனாட்டுக்கு கண்டிப்பாக வேண்டும் என்றும் கூறுகிறார் வெர்தேயான்.

பல்வேறு வேலைகளைச் செய்யும் உடல்திறனையும், ஆனால் அதேசமயம் பிரச்சினைகளை சரிசெய்யும் சமயோசித புத்தியையும் ரோபோனாட் போன்ற ஒரே ரோபாட்டில் வடிவமைக்க நாசா முயன்றுவருகிறது.

இதற்காக எம்பெட்டட் இன்டலிஜென்ஸ் (embedded intelligence)
எனும் தொழில்நுட்பம் மூலமாக ரோபோனாட்டை மேம்படுத்தி வரும் நாசா, சமீபத்தில் ரோபோனாட்டுக்கு செயற்கை நுண்ணறிவை புகுத்தி, அதனுடன் ஒரு அடிப்படை அறிவு டேட்டாபேஸ் ஒன்றையும் இணைப்பதன் மூலமாக ரோபோனாட் 2 போன்ற ஹியூமனாய்டு ரோபாட்டுகளை விரைவில் நடைமுறை செயல்பாடு மற்றும் விண்வெளி பயன்பாட்டுக்கும் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்