காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம்: சட்டசபையில் ஒருமனதாக நிறைவேறியது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி புதுவை சட்டசபையில் நேற்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2018-03-26 23:15 GMT
புதுச்சேரி,

புதுவை சட்டசபை கூட்டத்தில் கவர்னர் கிரண்பெடி உரையாற்றிய பின் முதல்-அமைச்சர் நாராயணசாமி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன்பின் முதல்-அமைச்சர் நாராயணசாமி, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதிநீர் ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி அரசின் தீர்மானத்தை கொண்டுவந்தார்.

அந்த தீர்மானத்தின் மீது அனைத்துக்கட்சி எம்.எல்.ஏ.க்களும் தங்களது கருத்துகளை தெரிவித்தனர். அதன் விவரம் வருமாறு:-

சிவா (தி.மு.க.):- கர்நாடகத்தில் எந்த அரசு இருந்தாலும் கோர்ட்டு தீர்ப்புகளை மதிப்பதில்லை. இப்போது மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா அரசு கர்நாடக சட்டசபை தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு தகிடுதத்த வேலைகளை செய்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது. நாம் அப்போதே இந்த பணியை செய்திருக்கவேண்டும். கர்நாடக முதல்-அமைச்சர் சித்தாராமையாவுக்கு உள்ள உணர்வு நமது முதல்-அமைச்சருக்கும் இருக்கவேண்டும்.

இப்போது காலங்கடந்து செய்கிறோம். தமிழகத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் போராட்டத்துக்கு அறைகூவல் விடுத்துள்ளார். அதேபோல் நாமும் புதுவை பொதுமக்கள், விவசாயிகள் என அனைவரையும் ஒன்றுதிரட்டி மிகப்பெரிய போராட்டத்துக்கு தயாராக இருக்கவேண்டும்.

அன்பழகன் (அ.தி.மு.க.):- கடந்த 2007-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு வந்தது. அதைத்தொடர்ந்து தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் நீண்ட சட்ட போராட்டத்துக்குப்பின் இந்த தீர்ப்பு வந்துள்ளது. எந்த தீர்ப்பினையும் மத்தியில் ஆண்ட காங்கிரஸ், பாரதீய ஜனதா அரசுகள் கண்டுகொண்டது கிடையாது. அவர்கள் தமிழகம், புதுச் சேரிக்கு மிகப்பெரிய துரோகம் இழைக்கின்றனர்.

இந்த பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வந்ததும் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்றுமாறு வலியுறுத்தினோம். ஆனால் நமது முதல்-அமைச்சர் கர்நாடகத்தில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு சாதகமாக கூட்டத்தை கூட்டவில்லை. மாநில உரிமையை நிலைநாட்டும் கடமையில் இருந்து அவர் தவறிவிட்டார்.

தமிழக முதல்-அமைச்சர் காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினை அழைத்துப் பேசுகிறார். நீங்கள் என்ன செய்தீர்கள்? இப்போதுகூட மெயின்கேட்டில் 2, 3 பேர் (நியமன எம்.எல்.ஏ.க்கள்) அமர்ந்து உள்ளனர். இதற்கு காரணம் நமது முதல்-அமைச்சர்தான். ஆட்சி அமைந்ததும் 3 நியமன எம்.எல்.ஏ.க்களை நியமிக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. ஆனால் அதை செய்யாததால் மத்திய அரசு திணித்துள்ளது.

ஆனால் அதே நேரத்தில் நமது சபாநாயகர் வருங்காலத்தில் வரக்கூடிய சபாநாயகர் களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருப்பார். கடமையை செய்ய காங்கிரஸ் தவறியபோதும் சபாநாயகர் தன்னந்தனியாக நின்று மாநில உரிமையை நிலைநாட்டுகிறார்.

(அமைச்சர் கமலக்கண்ணன், தி.மு.க. எம்.எல்.ஏ. கீதா ஆனந்தன், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அசனா, வையாபுரி மணிகண்டன் ஆகியோரும் தீர்மானத்துக்கு ஆதரவாக பேசினார்கள்)

இறுதியாக முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

நான் கர்நாடக அரசுக்கு ஆதரவாக செயல்பட்டதாக அன்பழகன் எம்.எல்.ஏ. குற்றஞ்சாட்டினார். அது உண்மைக்கு புறம்பானது. இந்த பிரச்சினையில் கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு இருந்தாலும் காரைக்கால் விவசாயிகளின் நலன்கருதி கர்நாடக அரசை எதிர்க்கிறோம். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்குமுறை ஆணையம் அமைக்காவிட்டால் மறுநாளே சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்வோம். காரைக்கால் விவசாயிகள் நலன்தான் எங்களுக்கு முக்கியம். சுப்ரீம்கோர்ட்டு உத்தரவினை மத்திய அரசும் மதிக்கவில்லை. கர்நாடக மாநில அரசும் மதிக்கவில்லை.

புதுச்சேரிக்கு பிரதமர் வந்தபோது நானும் அமைச்சர்களும் அவரை சந்தித்து பேசினோம். அப்போது பிரதமரிடமும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தினோம்.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார்.

அதைத்தொடர்ந்து தீர்மானத்தை குரல் வாக்கெடுப்புக்குவிட்ட சபாநாயகர் வைத்திலிங்கம் தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியதாக அறிவித்தார்.

இந்த தீர்மானம் அவையில் தாக்கல் செய்யப்பட்ட போதும், நிறைவேற்றப்பட்டபோதும் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் யாரும் சபையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்