விவசாயிகளின் நலன் புறக்கணிப்பதாக புகார்: பச்சை நிற துண்டால் முக்காடு போட்டு வந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், கவர்னர் உரையை எதிர்த்து கோஷம்

விவசாயிகளின் நலன் புறக்கணிக்கப்படுவதாக புகார் தெரிவித்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பச்சை நிற துண்டால் முக்காடு போட்டுக் கொண்டு சட்டசபைக்கு வந்தனர். கவர்னர் உரையை எதிர்த்து அவர்கள் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-03-26 23:30 GMT
புதுச்சேரி,

புதுவை மாநில சட்டசபைக்கு நேற்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், பாஸ்கர், அசனா ஆகியோர் வந்தனர். அவர்கள் தங்களது தலையில் பச்சை நிற துண்டுகளை முக்காடு போட்டுக்கொண்டு கூட்டம் நடைபெறும் அரங்கிற்கு சென்றனர்.

பின்னர் சபையில் கவர்னர் உரையாற்ற தொடங்கியதும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் தங்கள் இருக்கைகளில் இருந்து எழுந்து கோஷமிட்டபடி உரையாற்றிக்கொண்டிருந்த கவர்னரை நோக்கி சென்றனர். அப்போது சபை காவலர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதைத்தொடர்ந்து அவர்கள் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது ‘மத்திய அரசே, மாநில அரசே விவசாயிகளை வஞ்சிக்காதே’ என்று கோஷமிட்டனர். இதனால் சட்டசபையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இந்த அமளிக்கிடையே கவர்னர் தொடர்ந்து உரையாற்றினார்.

பின்னர் சட்டசபை வளாகத்தில் வைத்து நிருபர்களிடம் அன்பழகன் எம்.எல்.ஏ. கூறியதாவது:-

சுப்ரீம் கோர்ட்டின் இறுதி தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தியும், அதற்கு நடவடிக்கை எடுக்காத மாநில அரசை கண்டித்தும் அ.தி.மு.க. சார்பில் வெளிநடப்பு செய்துள்ளோம். காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க சுப்ரீம் கோர்ட்டு விதித்துள்ள கெடு வருகிற 29-ந்தேதியுடன் முடிகிறது. இந்தநிலையில், தற்போது சட்டமன்ற கூட்டத்தில் கொண்டு வரப்படும் தீர்மானம் என்பது காலம் கடந்த உபயோகமற்ற செயலாகும்.

இது விவசாயிகளை ஏமாற்றும் கண்துடைப்பு நாடகம். புதுவையில் விவசாயிகளின் நலன் புறக்கணிக்கப்படுகிறது. தற்போது சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்புவதற்குள் சுப்ரீம் கோர்ட்டின் காலக்கெடுவே முடிவடைந்துவிடும். எனவே அ.தி.மு.க. வலியுறுத்தியும் சிறப்பு சட்டமன்றத்தை கூட்ட நடவடிக்கை எடுக்காத கவர்னரை கண்டித்தும், அவரது உரையை புறக்கணித்தும் அ.தி.மு.க. வெளிநடப்பு செய்தது.

இவ்வாறு அன்பழகன் கூறினார். 

மேலும் செய்திகள்