சிந்தல்பாடி ரெயில்வே மேம்பால பகுதியில் சாலையின் இருபுறங்களிலும் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்

சிந்தல்பாடி ரெயில்வே மேம்பால பகுதியில் சாலையின் இருபுறங்களிலும் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

Update: 2018-03-26 22:45 GMT
தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மலர்விழி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கல்வி உதவித்தொகை, இலவச தையல் எந்திரம், சலவைப்பெட்டி, பசுமைவீடுகள், பட்டா மற்றும் சிட்டா, வாரிசு சான்றிதழ், சாலைவசதி, பஸ்வசதி, குழந்தைகள் நல மையம், முதியோர் ஓய்வூதியத்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர். மொத்தம் 385 கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன.

கூட்டத்தில் ஏ.கொல்லஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட கொட்டாய்மேடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தரப்பில் கொடுத்த கோரிக்கை மனுவில், எங்கள் பகுதியில் வசிக்கும் 250-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் அருகில் உள்ள இடுகாட்டில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்து வருகிறோம். இந்த நிலையில் இடுகாட்டிற்கு செல்லும் பாதையை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து உள்ளார். எனவே வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றி இந்த பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.

மிட்டாரெட்டி அள்ளி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுவில், மிட்டாரெட்டிஅள்ளி ஊராட்சி கோம்பை தொடக்கப்பள்ளி முதல்கொண்டகரஅள்ளி ஊராட்சி காளிகரம்பு ராமசாமி கோவில் வரை 1500 மீட்டருக்கும் குறைவான தொலைவு கொண்ட வழிப்பாதையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரிவுபடுத்தி இணைப்பு சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். 100-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்பெறும் வகையில் இந்த கோரிக்கையை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.

சிந்தல்பாடிபகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுவில், சிந்தல்பாடியில் இடிக்கப்பட்ட ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பகுதியில் தார் சாலைக்கு கீழ் பகுதியில் 10 அடி ஆழ பள்ளங்கள் உள்ளன. இங்கு விபத்து அபாயத்தை தடுக்க பக்கவாட்டு சுவர்கள் அமைக்க வேண்டும். இந்த சாலையின் இருபுறங்களிலும் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும். ரெயில் நிலையத்திற்கு பெயர் பலகை வைக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.

பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று விசாரணை நடத்திய கலெக்டர் மலர்விழி அவற்றை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி ஒரு வார காலத்திற்குள் பரிசீலித்து தீர்வு காண வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சங்கர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அமீர்பாஷா, தனித்துணை கலெக்டர் முத்தையன், முன்னோடி வங்கி மேலாளர் கண்ணன், மாவட்டஆதிதிராடர் மற்றும் பழங்குடியினர் நலத்திட்ட அலுவலர் சரவணன், மாவட்ட வழங்கல் அலுவலர் மகாலட்சுமி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன் மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்