புதுச்சேரியில் தனிநபர் வருமானம் உயர்வு: கவர்னர் உரையில் தகவல்

புதுச்சேரியில் தனிநபர் வருமானம் உயர்ந்துள்ளதாக கவர்னர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2018-03-27 00:00 GMT
புதுச்சேரி,

புதுவை சட்டசபையில் கவர்னர் கிரண்பெடி ஆற்றிய உரையில் கூறியிருப்பதாவது:-

வீட்டுவசதி மற்றும் கழிப்பிட வசதி மற்றும் தடையற்ற தரமான மின்சக்தி ஆகியவற்றை அளிப்பதன் மூலம் ஏழை மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. சமுதாயத்தில் ஏழ்மை நிலையிலுள்ள மக்களுக்கு அரசின் திட்ட பயன்களை முழுமையாக கொண்டு செல்ல முயற்சி மேற்கொண்டு தங்களது பங்களிப்பை செய்துள்ள அனைவரையும் பாராட்டுகிறேன்.

புதுச்சேரி மக்களின் நியாயமான மற்றும் தேவைகளை நிறைவேற்றுவதில் இந்த அரசு மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ளது. மக்களின் நியாயமான விருப்பங்களை நிறைவேற்றுவதில் மாநிலத்தின் வள ஆதாரங்கள் திறம்பட பயன்படுத்துவதை உறுதி செய்திடும் வகையில் செயல்படும் முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள சரக்கு மற்றும் சேவை வரி புதுவை யூனியன் பிரதேசத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. நிதிநிலையை பொறுத்தவரை நடப்பாண்டின் திட்ட செலவினம் ரூ.2,334 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 2016-17 ஆண்டின் திட்ட செலவினங்களைவிட 11.67 சதவீதம் அதிகம் ஆகும். கடந்த காலங்களில் வாங்கப்பட்ட கடன்தொகையை திரும்ப செலுத்த வேண்டியிருப்பதால் இவ்வாட்சிபரப்பு நிதிச் சுமையை எதிர்கொண்டு வரு கிறது. தற்போது நமது கடன் சுமையை குறைப்பதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளதால் இந்த அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அனை வரும் நன்கு அறிவார்கள்.

2017-18ம் ஆண்டுக்கான மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது ரூ.30 ஆயிரத்து 845 கோடிஎன மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 11.82 சதவீதம் அதிகம் ஆகும். முன்பு புதுச்சேரியின் தனிநபர் வருமானம் ரூ.1 லட்சத்து 73 ஆயிரத்து 687 ஆக இருந்தது. தற்போது ரூ.1 லட்சத்து 89 ஆயிரத்து 124 ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட 8.8 சதவீதம் அதிகம் ஆகும்.

நீர்வள ஆதார திட்டம் மற்றும் மேலாண்மை திட்டங்களை மேற்கொள்வதற்காக பிரதம மந்திரி வேளாண் நீர்ப்பாசன திட்டத்தின்கீழ் புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்ட நீர்ப்பாசன திட்டங்கள் நபார்டு கன்சல்டன்சி சர்வீஸ் நிறுவனத்தால் தயார் செய்யப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலைப்பெற்று நிதியுதவி கோரப்பட்டுள்ளது. பாசனத்திற்காக நீர்வள ஆதாரத்தை பெருக்குவதற்கு மத்திய அரசிடம் நிதியுதவி கோரியுள்ளது. அதிகமாக பால் தரும் கறவை மாடுகளை கூடுதலாக வழங்க நட வடிக்கை எடுத்து வருகிறது.

சுற்றுலா துறையுடன் இணைந்து வார இறுதி நாட்களில் கடற்கரை பகுதியில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அருங்காட்சியகத்தின் பார்வையாளர்கள் நேரம் உணவு இடைவேளையின்றி மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கவர்னர் உரையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்