கோவில் சிலை செய்ததில் மோசடி: முத்தையா ஸ்தபதி, ஆணையரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு

பழனி முருகன் கோவில் சிலை செய்ததில் மோசடி நடைபெற்றது குறித்து முத்தையா ஸ்தபதி, ஆணையர் ராஜா ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் கும்பகோணம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளனர்.

Update: 2018-03-26 23:00 GMT
கும்பகோணம்,

பழனி முருகன் கோவிலில் நவபாசனத்தால் ஆன மூலவர் திருமேனி சேதமடைந்ததாக கூறி, புதிய திருமேனியை தங்கத்தில் வடிவமைக்க கடந்த 2004-ம் ஆண்டு கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி புதிய சிலையை காஞ்சீ புரம் மாவட்டம் கேளம்பாக்கத்தை சேர்ந்த முத்தையா ஸ்தபதி (வயது77) என்பவர் வடிவமைத்தார். சிலை வடிவமைத்ததில் மோசடி நடைபெற்று இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சிலையை வடிவமைத்த முத்தையா ஸ்தபதி, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கே.கே.ராஜா ஆகியோருக்கு மோசடியில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் 2 பேரையும் கைது செய்து, நேற்று அதிகாலை கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

மனு தாக்கல்

வழக்கை விசாரித்த கோர்ட்டு, முத்தையா ஸ்தபதி, கே.கே.ராஜா ஆகியோருக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 9-ந் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டனர். அதன்படி போலீசார் 2 பேரையும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள 2 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக கும்பகோணம் கோர்ட்டில் நேற்று போலீசார் மனு தாக்கல் செய்தனர். 

மேலும் செய்திகள்