கொடுங்கையூரில் இரும்பு கடைக்காரர் காரில் கடத்தல் இடத்தின் உரிமையாளர் உள்பட 5 பேருக்கு வலைவீச்சு

கொடுங்கையூரில் இரும்பு கடைக்காரர் காரில் கடத்தப்பட்டார். இதுதொடர்பாக இடத்தின் உரிமையாளர் உள்பட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2018-03-26 23:30 GMT
பெரம்பூர்,

சென்னை கொடுங்கையூர் ஆர்.வி.நகர் 4-வது தெருவைச் சேர்ந்தவர் தேவபிரகாசம் (வயது 44). கொடுங்கையூர் காமராஜ் சாலையில் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். இந்த நிலம் ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்த கெங்கல்ராஜ் என்பவருக்கு சொந்தமானது.

தேவபிரகாசம் 10 வருடத்திற்கும் மேலாக இந்த இடத்தில் கடை நடத்தி வருகிறார். தேவபிரகாசம் அந்த நிலத்தை சொந்தமாக்குவதற்காக ரூ.80 லட்சத்திற்கு கெங்கல்ராஜிடம் விலை பேசினார். அதற்காக கடந்த 2013-ம் ஆண்டு ரூ.30 லட்சம் முன்பணமாக கெங்கல்ராஜிடம் கொடுத்தார்.

காலி செய்ய மறுப்பு

அந்த இடத்திற்கு பத்திர பதிவு செய்யும் போது மீதி பணம் கொடுப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால் அந்த நிலத்திற்கு பட்டா வாங்க முடியவில்லை என தெரிகிறது.

இதனால் கெங்கல்ராஜ், “நீங்கள் கொடுத்த முன்பணத்தை திருப்பி கொடுத்து விடுகிறேன். இடத்தை காலி செய்து விடுங்கள்” என தெரிவித்து உள்ளார். ஆனால் இடத்தை காலி செய்ய வேண்டுமானால் கூடுதல் பணம் வேண்டும் என தேவபிரகாசம் கூறியதாக தெரிகிறது.

இதுதொடர்பாக தேவபிரகாசத்துக்கும், கெங்கல்ராஜிக்கும் இடையே கடந்த 5 வருடங்களாக பிரச்சினை இருந்தது.

காரில் கடத்தல்

இருதரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பும் இந்த பிரச்சினை தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் தேவபிரகாசம் நேற்று காலை வழக்கம்போல் கடையில் இருந்தார். அப்போது காரில் வந்த மர்மநபர்கள் 4 பேர் தேவபிரகாசத்தின் கழுத்தில் கத்தியை வைத்து இடத்தை காலி செய்ய சொன்னால் மறுக்கிறாயா? எனக்கூறி அவரை தூக்கிச்சென்று காரில் வைத்து கடத்தினார்கள்.

உரிமையாளருக்கு வலைவீச்சு

கெங்கல்ராஜ் தான் கூலிப்படையை வைத்து தனது கணவரை கடத்தி விட்டதாக தேவபிரகாசத்தின் மனைவி உமா (40) கொடுங்கையூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் செம்பியம் போலீஸ் உதவி கமிஷனர் சரவணக்குமார் தலைமையிலான போலீசார் தேவபிரகாசத்தை தேடி வந்தனர்.

போலீசார் தேடுவதை அறிந்ததும் கடத்தல்காரர்கள் தேவபிரகாசத்தை பூந்தமல்லியில் உள்ள ஒரு இடத்தில் இறக்கிவிட்டு தப்பி சென்றனர். அங்கு இருந்து கொடுங்கையூர் வந்த தேவபிரகாசம் நடந்த சம்பவத்தை கூறி கொடுங்கையூர் போலீசில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான இடத்தின் உரிமையாளர் கெங்கல்ராஜ் மற்றும் கூலிப்படையினரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்