தாளவாடி அருகே யானை தூக்கி வீசியதில் வனக்காவலர் படுகாயம்

தாளவாடி அருகே யானை தூக்கி வீசியதில் வனக்காவலர் படுகாயம் அடைந்தார்.

Update: 2018-03-26 22:15 GMT
தாளவாடி,

சத்தியமங்கலம் வனப்பகுதியில் யானை, சிறுத்தை, புலி, மான் போன்ற வனவிலங்குகள் உள்ளன.

தற்போது வனப்பகுதியில் போதிய தீவனம் மற்றும் தண்ணீர் இல்லை. இதனால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் வெளியேறி கிராமங்களுக்குள் புகுந்துவிடுகின்றன.

தாளவாடியை அடுத்த ஆசனூர் அருகே உள்ள அரேபாளையம் பள்ளத்தில் நீர் தேங்கி உள்ளது. இதனால் ஏராளமான யானைகள் இங்கு வந்து தண்ணீர் குடித்துவிட்டு செல்கின்றன.

அதன்படி நேற்று காலை யானை ஒன்று தண்ணீர் குடிக்க வந்தது. அப்போது அந்தப்பகுதியை சேர்ந்த சிலர் யானையை சத்தம்போட்டு தண்ணீர் குடிக்க விடாமல் இடையூறு செய்தனர்.

உடனே இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்கள் ஆசனூர் அருகே கெத்தேசால் காப்புக்காட்டில் வனக்காவலராக பணியாற்றும் ராசய்யா (வயது 48) என்பவருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் கிடைத்ததும் ராசய்யா மற்றும் வனஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு சிலர் நின்று கொண்டு யானையை தண்ணீர் குடிக்க விடாமல் சத்தம் போட்டுக்கொண்டு இருந்தனர். வனத்துறையினரை கண்டதும், அவர்கள் அங்கிருந்து ஓடினர்.

இதைத்தொடர்ந்து வனக்காவலர் ராசய்யா மற்றும் ஊழியர்கள் தண்ணீர் உள்ள இடத்துக்கு சென்றனர். அப்போது புதர்மறைவில் நின்ற அந்த யானை வனக்காவலர் ராசய்யாவை துதிக்கையால் பிடித்து தூக்கி வீசியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். அதுமட்டுமின்றி மற்ற வனஊழியர்களையும் யானை துரத்தியது. இதனால் அவர்கள் அங்கிருந்து பயந்து தலைதெறிக்க ஓடினார்கள். பின்னர் சிறிது நேரத்தில் யானை வனப்பகுதிக்குள் சென்று விட்டது.

யானை சென்றதும், வன ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ராசய்யாவை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதுபற்றி அறிந்ததும் வனத்துறை அதிகாரிகள் ஆஸ்பத்திரிக்கு சென்று வனக்காவலர் ராசய்யாவுக்கு ஆறுதல் கூறினார்கள்.

மேலும் செய்திகள்