கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்
கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு முழுவதுமாக நிறுத்தப்பட்டது.
ஊத்துக்கோட்டை,
பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், புழல் ஆகிய ஏரிகளில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரை கொண்டு சென்னை நகர மக்களின் குடிநீர் தேவை நிறைவேற்றப்படுகிறது. இதில் பூண்டி ஏரியில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீட்டு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை சேமித்து வைத்து, தேவைப்படும்போது புழல் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.
கிருஷ்ணா நதிநீர் பங்கீட்டு திட்டத்தின்படி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நீர் ஜனவரி மாதம் 2-ந் தேதி பூண்டி ஏரிக்கு வந்தடைந்தது.
முதலில் வினாடிக்கு ஆயிரம் கனஅடியாக திறக்கப்பட்ட தண்ணீர், பின்னர் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு அதிகபட்சமாக வினாடிக்கு 2,450 கனஅடியாக திறக்கப்பட்டது. இந்த நீர் பூண்டி ஏரிக்கு அதிகபட்சமாக வினாடிக்கு 610 கனஅடி வீதம் வந்து சேர்ந்தது.
தண்ணீர் திறப்பு நிறுத்தம்
கண்டலேறு அணையின் மொத்த கொள்ளளவு 68 டி.எம்.சி. ஆகும். அணையில் நீர்மட்டம் வெகுவாக குறைந்ததால் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டது. நேற்று காலை கண்டலேறு அணையில் 6.40 டி.எம்.சி. தண்ணீர் மட்டும்தான் இருப்பு இருந்தது.
இதனால் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு முழுவதுமாக நிறுத்தப்பட்டது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3,231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். நேற்று மதியம் 2 மணி நிலவரப்படி ஏரியின் நீர் மட்டம் 30.25 அடியாக பதிவானது. 1,809 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.
கால்வாய் வறண்டது
பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு லிங்க் கால்வாய் மூலமாக வினாடிக்கு 360 கனஅடி வீதமும், சென்னை குடிநீர் வாரி யத்துக்கு பேபி கால்வாயில் வினாடிக்கு 18 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்படுகிறது.
ஜனவரி 2-ந் தேதி முதல் நேற்று வரை 84 நாட்களில் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 2,279 மில்லியன் கனஅடி (2.279 டி.எம்.சி.) தண்ணீர் வந்து சேர்ந்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு முழுவதுமாக நிறுத்தப்பட்டு விட்டதால் கிருஷ்ணா நதி கால்வாய் வறண்டுபோய் காணப்படுகிறது. கால்வாயின் சில இடங்களில் ஆங்காங்கே குறைந்த அளவு தண்ணீர் தேங்கி கிடக்கிறது.