உரிமம் இல்லாமல் கர்நாடகத்துக்குள் நுழைந்த 2 வெளிமாநில தனியார் பஸ்கள் ‘ஜப்தி’

உரிமம் இல்லாமல் கர்நாடகத்துக்குள் நுழைந்த 2 வெளிமாநில தனியார் பஸ்களை ‘ஜப்தி’ செய்து வட்டார போக்குவரத்து அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.

Update: 2018-03-25 23:08 GMT
சிக்கமகளூரு,

மும்பை-பெங்களூரு இடையே ஏராளமான தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு இயக்கப்படும் பஸ்களில் ஏராளமான பஸ்கள் உரிய உரிமம் இல்லாமல் இயங்கி வருவதாக ஏராளமான புகார்கள் வந்தன. இதனால் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் அவ்வப்போது அதிரடி சோதனை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் தாவணகெரே வட்டார போக்குவரத்து துறை அதிகாரி சீனிவாஸ் தலைமையிலான அதிகாரிகள் தாவணகெரே-உப்பள்ளி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மும்பையில் இருந்து பெங்களூரு நோக்கி வந்த அருணாசல பிரதேச மாநில பஸ்சையும், மராட்டிய மாநில பஸ்சையும் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது அந்த பஸ்கள், உரிமம் இல்லாமல் கர்நாடக மாநிலத்துக்குள் நுழைந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த 2 தனியார் பஸ்களையும் வட்டார போக்குவரத்து அதிகாரி ‘ஜப்தி’ செய்தார். இதனால் 2 பஸ்களில் இருந்த பயணிகளும் நடு வழியில் இறக்கி விடப்பட்டனர். அவர்கள் வட்டார போக்குவரத்து அதிகாரிகளுடன் திடீரென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நடு வழியில் இறக்கி விடப்பட்டதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினார்கள். பின்னர் அவர்கள் வேறு பஸ்களில் ஏறி அங்கிருந்து பெங்களூருவுக்கு புறப்பட்டு சென்றனர்.

இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரி சீனிவாஸ் கூறுகையில், மும்பையில் இருந்து பெங்களூரு செல்லும் பெரும்பாலான தனியார் பஸ்கள் உரிமம் இல்லாமல் இயங்குகின்றன. இதனால் அவ்வப்போது சோதனை நடத்தி வருகிறோம். இந்த மாதத்தில் மட்டும் 45 தனியார் பஸ்களில் சோதனை நடத்தி உள்ளோம். அதில், உரிய பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் இயங்கியதாக தனியார் பஸ்களில் இருந்து ரூ.85 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. 2 பஸ்களும் ஜப்தி செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என்றார். 

மேலும் செய்திகள்