ஓசூர் உள்பட 4 இடங்களில் விரைவில் விமான சேவை தொடங்கப்படும் எடப்பாடி பழனிசாமி பேட்டி
ஓசூர் உள்பட 4 இடங்களில் விரைவில் விமான சேவை தொடங்கப்படும் என்று சேலத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சேலம்,
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காமலாபுரத்தில் உள்ள விமான நிலையத்தில் நேற்று சேலம்-சென்னை இடையே விமான சேவையை தொடங்கி வைத்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எல்லா மக்களுக்கும் போக்குவரத்து வசதி மிக முக்கியம். சேலம் மாநகரம் வளர்ந்து வரும் நகரமாகும். அதனை சுற்றியுள்ள நகரங்களும் தொழில் நகரமாக உள்ளது. எனவே சேலத்தில் விமான சேவை முக்கியமானதாக கருதப்படுகிறது. விமான சேவை இருந்தால் தான் புதிய தொழிற்சாலைகள் தமிழகத்துக்கு வரும்.
சேலம் விமான நிலையத்தில் இருந்து நாட்டின் பிற நகரங்கள், வெளிநாடுகளுக்கு செல்லவும், அங்கிருந்து சேலம் வரவும் விமானங்களை இயக்கும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. விமான நிலையம் விரிவாக்கம் என்பது ஏற்கனவே எடுத்த முடிவு. இடையில் விமான போக்குவரத்து இல்லாததால் விரிவாக்க பணி நடைபெறவில்லை. தற்போது உரிய இழப்பீடு வழங்கப்பட்டு நிலம் கையகப்படுத்தப்படும்.
சேலத்தில் பெரியரக விமான போக்குவரத்து தொடங்குவதற்கு விமான நிலைய விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ள வேண்டி உள்ளது. அது முடிந்தவுடன் சேலத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு பெரிய ரக விமானமும் இயக்கப்படும். இதேபோல், மதுரை, கோவை, திருச்சி, தூத்துக்குடி, சென்னை விமான நிலையங்கள் விரிவாக்கம் செய்வதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.
‘உதான்’ திட்டத்தின் மூலம் ஓசூரில் இருந்து சென்னைக்கு இன்னும் 3 மாதத்தில் விமான சேவை தொடங்கப்படும். அதைத்தொடர்ந்து தஞ்சாவூர், வேலூர், நெய்வேலி ஆகிய இடங்களில் இருந்தும் விரைவில் விமான சேவை தொடங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தொழில் வளர்ச்சி அடைவதற்கு சிறிய நகரங்களில் விமான சேவை முக்கியம். புதிய தொழில்கள் வந்தால்தான் நாட்டில் பொருளாதார மேம்பாடு, வேலைவாய்ப்பு கிடைக்கும்.
சேலம், கோவை, ஓசூரில் ராணுவ பாதுகாப்பு தளவாடங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படும் என்று மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதற்காக அவருக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.