பின்தங்கிய மாவட்டங்களான சிவகங்கை, ராமநாதபுரம் வளர்ச்சிக்கு சிறப்பு திட்டம் செயல்படுத்த வேண்டும், பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி பேட்டி

பின்தங்கிய மாவட்டங்களான சிவகங்கை, ராமநாதபுரம் வளர்ச்சிக்கு மத்திய-மாநில அரசுகள் சிறப்பு திட்டம் செயல்படுத்த வேண்டும் என்று பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி கூறினார்.

Update: 2018-03-25 22:45 GMT
பின்தங்கிய மாவட்டங்களான சிவகங்கை, ராமநாதபுரம் வளர்ச்சிக்கு சிறப்பு திட்டம் செயல்படுத்த வேண்டும், பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி பேட்டி
சிவகங்கை,

சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் கூட்டம், மாநில தலைவர் ஜி.கே.மணி தலைமையில் சிவகங்கையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில துணை பொதுச் செயலாளர் ராஜ்குமார், மாவட்ட செயலாளர்கள் ராஜசேகரன்(சிவகங்கை), தங்கராஜ் மற்றும் சண்முகம்(ராமநாதபுரம்), சிவகங்கை மாவட்ட பொறுப்பாளர் கபிலன் உள்பட 2 மாவட்டங்களின் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கூட்டம் முடிந்த பின்னர் ஜி.கே.மணி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் தமிழகத்தில் சிவகங்கை, ராமநாதபுரம் உள்பட பல மாவட்டங்கள் முழுமையான வளர்ச்சி பெறவில்லை. சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டு மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. மத்திய-மாநில அரசுகள் பின்தங்கிய மாவட்டங்கள் வளர்ச்சி பெற சிறப்பு திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை. எனவே பின்தங்கிய சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட வளர்ச்சிக்கு மத்திய-மாநில அரசுகள் சிறப்புத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

ஜி.எஸ்.டி. வரியால் தமிழகத்தில் உற்பத்தி முடக்கப்பட்டுள்ளது. அத்துடன் விலைவாசியும் உயர்ந்துள்ளது. எனவே மத்திய நிதி மந்திரி ஜி.எஸ்.டி. வரியை குறைக்கவும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் படித்த இளைஞர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். எனவே புதிய தொழில்கள் தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவகங்கையில் கிராபைட் தொழிற்சாலை தொடங்க வேண்டும். மேலும் சிவகங்கை மாவட்டத்தில் பாலாறு, உப்பாறு பகுதியில் பாசன வசதிக்காக தடுப்பணை கட்ட வேண்டும். இங்கு பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த 2 மாவட்டங்களிலும் தற்போது கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. அதை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் காவிரி நடுவர் மன்ற உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். தற்போது மத்திய அரசு காவிரி கண்காணிப்பு குழு அமைப்பதாக அறிவித்துள்ளது. இந்த குழுவால் எந்த பயனும் இல்லை. தமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கை அரசால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே அதில் மத்திய அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து மீனவர்களை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்