ஒர்க்‌ஷாப் உரிமையாளர் வீட்டில் கொள்ளை: தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை

மார்த்தாண்டம் அருகே ஒர்க்‌ஷாப் உரிமையாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2018-03-25 22:15 GMT
குழித்துறை,

மார்த்தாண்டம் அருகே நட்டாலம் சரல்விளையை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (வயது 60). இவர் அந்த பகுதியில் ஒர்க்‌ஷாப் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று சுந்தர்ராஜ் அவரது மனைவி பிரேமா, மற்றும் மகள் ஆகியோர் வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தனர்.

நள்ளிரவில் மர்ம நபர்கள் வீட்டு மாடி பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து, வீட்டின் கீழ் தளத்திற்கு சென்றனர். அங்கு இருந்த மேஜையை உடைத்து அதற்குள் இருந்த 19 பவுன் தங்க நகை, ரொக்க பணம் 30 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

தனிப்படை விசாரணை

இதுகுறித்து மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், கைரேகை நிபுணர்களும், மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அதில் கொள்ளையர்கள் குறித்து எந்த துப்பும் துலங்கவில்லை.

இந்த நிலையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பல கோணங்களில் விசாரணை முடுக்கி விட்டுள்ளனர். அதில் கொள்ளையர் உள்ளூர்வாசிகளாக இருக்கலாம் என்ற தகவல் கிடைத்துள்ளது.

அதனடிப்படையில் உள்ளுர்வாசிகள் யாரேனும் திடீர் தலைமறைவாகி உள்ளனரா? என்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சுந்தர்ராஜின் வீட்டில் பொருத்தி இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளையும் போலீசார் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்