வலங்கைமான் மகாமாரியம்மன் கோவிலில் பாடைக்காவடி திருவிழா

வலங்கைமான் மகாமாரியம்மன் கோவிலில் பாடைக்காவடி விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Update: 2018-03-25 22:45 GMT
வலங்கைமான்,

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் குடமுருட்டி ஆற்றங்கரையில் மகாமாரியம்மன் கோவில் உள்ளது. 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் பாடைக்காவடி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பாடைக்காவடி திருவிழா கடந்த 9-ந் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது.

நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் குணம் அடைய மகாமாரியம்மனை வேண்டி கொள்வர். குணமடைந்தவர்கள் இக்கோவிலுக்கு வந்து பச்சை ஓலையில் பின்னப்பட்ட பாடையில் இறந்தவர்களைப்போல் படுத்துக்கொள்வர். இவர்களுக்கு இறந்தவர்களுக்கு செய்யப்படும் அனைத்து சடங்குகளும் செய்யப்பட்டு, பாடையை உறவினர்கள் 4 பேர் தீச்சட்டியுடன் தூக்கி வந்து கோவிலை 3 முறை வலம் வருவார்கள். இதுவே பாடைக்காவடி திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பாடைக்காவடி திருவிழா நேற்று நடந்தது. விழாவையொட்டி குடமுருட்டி ஆற்றங்கரையில் இருந்து அதிகாலை முதல் திரளான பக்தர்கள் காவடிகள் எடுத்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். பாடைக்காவடி, தொட்டில் காவடிகளை அதிகளவு பக்தர்கள் எடுத்து வந்தனர். இதை தொடர்ந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.மாலையில் அம்மன் வெள்ளி அன்ன வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. அப்போது செம்மறி ஆடு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. பின்னர் கோவிலின் எதிர்புறம் அமைக்கப்பட்டிருந்த செடில் மரத்தில் ஆட்டை ஏற்றி 3 முறை வலம் வரப்பட்டது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தங்க கவசம் சாத்தப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ், கூட்டுறவு வங்கி தலைவர் குணசேகரன், அ.தி.மு.க. வலங்கைமான் ஒன்றிய செயலாளர்கள் குருமூர்த்தி, சங்கர், கொரடாச்சேரி ஒன்றிய செயலாளர் பாஸ்கர், நகர செயலாளர் செந்தில்குமார் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு அருண் தலைமையில், இன்ஸ்பெக்டர் மஞ்சுளா மற்றும் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பக்தர்கள் நெரிசல் மிகுந்த பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டன. விழாவையொட்டி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தஞ்சாவூர், திருவாரூர், மன்னார்குடி, மயிலாடுதுறை, கும்பகோணம், ஜெயங்கொண்டம் ஆகிய மார்க்கங்களில் இருந்து வலங்கைமானுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. கோவில் முன்புறம் தீயணைப்பு வாகனம் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது. கோவில் வளாகங்களில் பேரூராட்சியின் சார்பில் தடையில்லா குடிநீர், கழிவறை வசதிகளும் செய்யபட்டு இருந்தன.

விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை இயக்குனர் தென்னரசு உத்தரவின்படி, உதவி ஆணையர் கிருஷ்ணன் தலைமையில், கோவில் செயல் அலுவலர் சிவக்குமார், ஆய்வாளர் தமிழ்மணி, மேலாளர் சீனிவாசன், பேரூராட்சி செயல் அலுவலர் சமயச்சந்திரன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து இருந்தனர். 

மேலும் செய்திகள்