ஆரம்ப-துணை சுகாதார நிலையங்களை தனியார் மயமாக்கும் திட்டத்தை கைவிடாவிட்டால் போராட்டம் நடத்தப்படும்

ஆரம்ப-துணை சுகாதார நிலையங்களை தனியார் மயமாக்கும் திட்டத்தை கைவிடாவிட்டால் மாநில அளவில் போராட்டம் நடத்தப்படும் கிராம சுகாதார செவிலியர் சங்கம் அறிவிப்பு

Update: 2018-03-25 22:15 GMT
பெரம்பலூர்,

தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் நல சங்கத்தின் அவசர பொதுக்குழு கூட்டம் பெரம்பலூரில் நடந்தது. மாநில தலைவர் மீனாட்சி தலைமை தாங்கினார்.

மாநில துணை தலைவர் விமலாதேவி முன்னிலை வகித்தார். மாநில அமைப்பு செயலாளர் பாலாம்பிகை வரவேற்று பேசினார். இந்த கூட்டத்தில், தமிழகத்தில் உள்ள ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்களை தனியார் மயமாக்கும் முடிவுக்கு மத்திய-மாநில அரசுகள் வந்துள்ளன. கிராம செவிலியர் பயிற்சி பள்ளிகளுக்கு வழங்கும் நிதியை நிறுத்தி, அவற்றை மூடி விடும் முயற்சியும் நடந்து வருகிறது. அதன் பின், இந்த பயிற்சியை முடித்து பணிக்கு வந்துள்ள எங்களுக்கு பதிலாக, அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய இளநிலை மற்றும் முதுநிலை செவிலியர் பட்டப்படிப்பு முடித்துள்ளவர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்களை தனியார்மயமாக்கும் திட்ட கருத்துகளை திரும்பபெற வேண்டும். இல்லாவிட்டால் மாநில அளவில் போராட்டம் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநில செயல் தலைவர் கோமதி தீர்மானத்தை விளக்கி பேசினார்.

இந்த கூட்டத்தில், மாநில இணைச் செயலாளர் சரோஜா, மாநில பொது செயலாளர் சுமதி, மாவட்ட பொருளாளர் செல்வமணி மற்றும் அறிவுக்கொடி உள்பட செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்