பேளூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ருத்ரேஷ்கவுடா மாரடைப்பால் மரணம்

பேளூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ருத்ரேஷ்கவுடா மாரடைப்பால் நேற்று மரணம் அடைந்தார்.

Update: 2018-03-24 23:03 GMT
பெங்களூரு,

ஹாசன் மாவட்டம் பேளூர் தொகுதியில் கடந்த 2013-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ருத்ரேஷ்கவுடா (வயது 63). இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். நேற்று முன்தினம் டெல்லி மேல்-சபைக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஓட்டுப்போடுவதற்காக ஹாசனில் இருந்து பெங்களூருவுக்கு ருத்ரேஷ்கவுடா காரில் புறப்பட்டார்.

பெங்களூரு அருகே வந்தபோது திடீரென்று அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக தனியார் மருத்துவமனையில் ருத்ரேஷ்கவுடா அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் குழுவினர் ருத்ரேஷ்கவுடாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து, தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு ருத்ரேஷ்கவுடாவுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தார்கள்.

ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் நேற்று மாலையில் பெங்களூருவில் இருந்து ருத்ரேஷ்கவுடாவின் உடல் ஹாசன் மாவட்டம் பேளூருக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்குள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது. ருத்ரேஷ்கவுடாவின் உடலுக்கு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள். ருத்ரேஷ்கவுடாவின் இறுதிச்சடங்கு அவரது சொந்த ஊரான பேளூர் அருகே சிக்கன ஹள்ளியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.

இதில் முதல்-மந்திரி சித்தராமையா, மாநில தலைவர் பரமேஸ்வர் மற்றும் மந்திரிகள், காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டு, ருத்ரேஷ்கவுடா உடலுக்கு அஞ்சலி செலுத்த உள்ளனர். மேலும் கர்நாடகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ருத்ரேஷ்கவுடாவின் உடலுக்கு இன்று அஞ்சலி செலுத்தலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

ருத்ரேஷ்கவுடா கடந்த 1985-ம் ஆண்டு தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். பின்னர் ஜனதா கட்சியில் இணைந்த அவர், ஹாசன் மாவட்ட பஞ்சாயத்து தலைவராக 2 தடவை பதவியில் இருந்தார். மேலும் ஜனதா கட்சி சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். கடந்த 2004-ம் ஆண்டு காங்கிரசில் சேர்ந்த அவர், 2008 மற்றும் 2013-ம் ஆண்டு பேளூர் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மரணமடைந்த ருத்ரேஷ்கவுடாவுக்கு கீர்த்தனா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.

மேலும் செய்திகள்