தமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை தி.மு.க. பேச்சாளர்கள் பேச்சு

தமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை என்று தி.மு.க. பேச்சாளர்கள் பேசினார்கள்.

Update: 2018-03-24 22:00 GMT
ஈரோடு,

ஈரோடு மண்டல தி.மு.க. மாநாட்டில் பல்வேறு தலைப்புகளில் தி.மு.க. பேச்சாளர்கள் பேசினார்கள்.

நடிகர் வாகை சந்திரசேகர் எம்.எல்.ஏ. பேசும்போது, “60 வயதிலும், 69 வயதிலும் சிலர் அரசியலில் வெற்றிடம் இருப்பதாக கூறி வருகிறார்கள். இவர்கள் சினிமாவில் கிடைத்த மாயையை வைத்து அரசியல் வெளிச்சம் கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால் தலைவர் கருணாநிதி சமூக வளர்ச்சிக்கான பகுத்தறிவினை திரைப்படங்கள் மூலம் பரப்பியவர். எனவேதான் அவர் வெற்றி பெற்றார். கருணாநிதியை தலைவராக ஏற்றுக்கொண்ட எம்.ஜி.ஆர். மட்டுமே அரசியலில் வெற்றி பெற முடிந்தது. தற்போது வெற்றிடம் இருக்கிறது என்று 60 வயதிலும், 69 வயதிலும் கூறி வருபவர்கள் தேர்தலில் வெற்றி பெறவில்லை என்றால் அவர்கள் நடிக்க சென்று விடுவார்கள். ஆனால் எப்போதும் மக்களோடு இருப்பவர் மு.க.ஸ்டாலின்” என்று குறிப்பிட்டார்.

வி.பி.ராஜன் பேசும்போது, “தமிழக அரசியலில் எப்போதும் வெற்றிடம் இருந்ததில்லை. தலைவர் கருணாநிதி இருக்கிறார். அவருடன் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார். அவருக்கு பிறகும் தயாநிதி ஸ்டாலின் இருக்கிறார். எனவே வெற்றிடம் என்று யாரும் கூற வேண்டியதில்லை” என்றார்.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறும்போது, “இளைஞர்கள் எங்கும் செல்லவில்லை. தி.மு.க.வின் இளைஞர் அணியில் இருக்கிறார்கள். விரைவில் இதே இளைஞர் படையின் முன்னிலையில் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்-அமைச்சராக பதவி ஏற்பார்” என்றார்.

மனுஷ்யபுத்திரன் பேசும்போது, “இங்கே தற்போது ஒரு பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. ராம ராஜ்யம் வேண்டுமா? ராமசாமி(பெரியார்) ராஜ்யம் வேண்டுமா? நமக்கு தேவை ராமசாமி ராஜ்யம்” என்றார்.

திருச்சி சிவா பேசும்போது, “நமக்கு தேவை ஆண்டாளின் தமிழா? அண்ணாவின் தமிழா?. பெரியாழ்வார் தமிழா? பெரியார் தமிழா?” என்றார். கம்பம் செல்வேந்திரன் பேசும்போது, “சிலர் இப்போது அரசியலில் வெற்றிடம் இருக்கிறது என்று அரசியலுக்கு வருகிறார்கள்.

காற்றின் வெற்றிடத்தை காற்று நிரப்பும், ஒரு டாக்டரின் வெற்றிடத்தை டாக்டர் நிரப்புவார். அது எப்படி அரசியல் வெற்றிடத்தை நடிகர் நிரப்ப முடியும்” என்றார். “வெற்றிடம் தமிழக அரசியலில் இல்லை. வெற்றிடம் இருக்கிறது என்று கூறுபவர்களின் மண்டையில் வெற்றிடம் இருக்கிறது” என்றார் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்.

தமிழன் பிரசன்னா பேசும்போது, “மு.க.ஸ்டாலின் கட்டி முடிக்கப்பட்ட கோபுரமாக இருக்கிறார். அந்த கோபுரத்தில் காற்றடித்து பறந்து வந்த சில குப்பைகள் தற்போது மக்கள் தங்களைத்தான் வணங்குகிறார் என்று கூறுகிறார்கள். ஆனால் குப்பை பறந்து சென்றுவிடும். கோபுரம் நிலையாக இருக்கும்” என்றார்.

இவ்வாறு பேச்சாளர்கள் பேசினார்கள்.

மேலும் செய்திகள்