வாக்குச்சாவடி நிலை அலுவலர் பணிக்கு எதிர்ப்பு: சேலத்தில் ஆசிரியர்கள் சங்கத்தினர் உண்ணாவிரதம்
வாக்குச்சாவடி நிலை அலுவலர் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் அனைத்து ஆசிரியர்கள் சங்கத்தினர் உண்ணாவிரதம் இருந்தனர்.
சேலம்,
தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் சார்பில் அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர் பணி ஒதுக்கீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதை மாவட்ட நிர்வாகம் ரத்து செய்யக்கோரியும் சேலத்தில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு மாவட்ட செயலாளர் அன்புமணி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் பெருமாள், துணை செயலாளர் சக்திவேல் உள்பட பல்வேறு ஆசிரியர் சங்கங்களை சேர்ந்தவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர் பணி வழங்கி உள்ளதால் அவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுகிறது. இதனால் ஆசிரியர் பணி மிகவும் பாதிக்கப்படுகிறது. அதாவது, பள்ளி நேரத்தை முடித்துவிட்டு ஒரு ஆசிரியர் வீடு வீடாக சென்று களப்பணியில் ஈடுபடுவதால் அவர்கள் வீட்டிற்கு செல்ல இரவு 8 மணி ஆகிறது. ஒவ்வொரு நாளும் அடுத்த நாள் நடத்த இருக்கும் பாடப்பகுதியை திட்டமிடுதல் தடைப்படுகிறது. இதனால் அரசு பள்ளி மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படும்.
நெல்லை மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கு பெரும்பாலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர் (பி.எல்.ஓ.) பணியானது தவிர்க்கப்பட்டுள்ளது. அதன் விளைவாக அந்த மாவட்டம் தரநிலை அறிக்கையில் முன்னிலை பெற்றுள்ளது. எனவே, சேலம் மாவட்டத்தில் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தேர்தல் பணியை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.