என்.எல்.சி. சார்பில் அண்ணா விளையாட்டு மைதானத்தில் ரூ.1¼ கோடியில் மேம்பாட்டு பணிகள் தொடங்கியது

என்.எல்.சி. இந்தியா நிறுவனம் சார்பில் கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் ரூ.1¼ கோடி செலவில் மேம்பாட்டு பணிகள் தொடங்கியது. மேலும் இதற்கான கட்டுமான பணிகளை அதிகாரிகள் பார்வையிட்டனர்.

Update: 2018-03-24 22:00 GMT
கடலூர், 

கடலூர் மஞ்சக்குப்பத்தில் அண்ணா விளையாட்டு மைதானம் உள்ளது. மிகவும் பழமையான இந்த மைதானத்தில் குழுபோட்டிகள், தடகளம் ஆகிய விளையாட்டுகளுக்கு தினமும் காலை, மாலை வேளைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. கடலூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பயிற்சிக்காக வந்து செல்கிறார்கள்.

இந்த விளையாட்டு மைதானத்தில் பயிற்சி பெற்ற விளையாட்டு வீரர் வீராங்கனைகள் மாவட்ட, மண்டல, மாநில, தேசிய மற்றும் ஆசிய அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுபெற்று சாதனை நிகழ்த்தி இருக்கிறார்கள். அதுமட்டுமின்றி பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிலும் பணிபுரிந்து வருகிறார்கள்.

இத்தகையை பெருமைக்குரிய அண்ணா விளையாட்டு மைதானத்தின் சுற்றுச்சுவரை பாதுகாப்புடன் கூடியதாக உயர்த்தி அமைக்க வேண்டும், நடைபாதையை சுற்றிலும் மின் விளக்குகள் அமைக்க வேண்டும், விளையாட்டு மைய கட்டிடம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் பொதுமக்கள் மத்தியில் எழுந்தது.இதற்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கடலூர் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்தது. மேற்கண்ட பணிகளை என்.எல்.சி. இந்தியா நிறுவனம் செய்து தர முன்வந்து இதற்காக ரூ.1 கோடியே 21 லட்சம் நிதியையும் ஒதுக்கியது. மேம்பாட்டு பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் விளையாட்டு மாணவர் விடுதியின் அருகில் 4 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் விளையாட்டு மைய கட்டிடமும், அதையொட்டி திறந்த வெளி கூட்ட அரங்கம் கட்டும் பணி, விளையாட்டு மைதானத்தின் சுற்றுச்சுவர் தற்போதைய அளவை விட கூடுதலாக 2 அடி உயர்த்தும் பணி ஆகியவை நடைபெற்று வருகிறது. சுற்றுச்சுவரில் சில இடங்களில் ஏற்கனவே விரிசல் ஏற்பட்டு சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. அதை இடித்து விட்டு தரைப்பகுதியில் இருந்து புதிதாக சுவர் எழுப்பப்பட்டு வருகிறது.

கட்டுமான பணிகளை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அதிகாரி ராஜா, என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் என்ஜினீயர்(கட்டுமானம்) மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

மேலும் செய்திகள்