பாடி மேம்பாலத்தில் அடுத்தடுத்து 2 பெண்களிடம் சங்கிலி பறிப்பு

சென்னை பாடி மேம்பாலத்தில் அடுத்தடுத்து 2 பெண்களிடம் மோட்டார்சைக்கிளில் வந்த மர்மநபர்கள் தங்கச்சங்கிலிகளை பறித்துச் சென்றனர். தொடரும் நகை பறிப்பு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Update: 2018-03-24 22:15 GMT
அம்பத்தூர்,

சென்னை கொரட்டூரை அடுத்த ராஜாங்குப்பம் ராஜீவ்காந்தி காலனி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பத்மநாபன் (வயது 52). இவரது மனைவி பானுமதி (47). நேற்று முன்தினம் இரவு பானுமதி தனது மகனுடன் திருமங்கலத்தில் உள்ள உறவினர் வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மோட்டார்சைக்கிளில் சென்றார்.

நிகழ்ச்சி முடிந்ததும் இருவரும் மோட்டார்சைக்கிளில் வீடு திரும்பினர். பாடி மேம்பாலத்தில் வந்தபோது, பின்னால் மோட்டார்சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் பானுமதியின் கழுத்தில் கிடந்த 10 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து கொரட்டூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே, பானுமதியிடம் நகை பறித்த அதே மர்மநபர்கள், பாடி மேம்பாலத்தில் திருமங்கலம் செல்லும் வழியில் கணவருடன் மோட்டார்சைக்கிளில் சென்ற, அம்பத்தூர் மேனாம்பேடு பகுதியை சேர்ந்த பத்மாவதி என்பவரிடமும் 6 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துச்சென்றனர்.

அப்போது பின்தொடர்ந்து விரட்டிச்சென்றவர்களை நகை பறிப்பு ஆசாமிகள் கத்தியைக்காட்டி மிரட்டிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் திருமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல், அம்பத்தூர் கள்ளிக்குப்பம் பாலாஜி நகர் 4–வது தெருவை சேர்ந்தவர் சந்திரன் (70). இவரது மனைவி வத்சலா (64). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டு வாசலில் தனியாக நின்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார்சைக்கிளில் கணவன்–மனைவி போல் வந்திறங்கிய ஆணும், பெண்ணும் அவரிடம் பேச்சு கொடுத்தனர். பின்னர் திடீரென வத்சலா கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து அம்பத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

கடந்த சில மாதங்களாக அம்பத்தூர், கொரட்டூர், திருமங்கலம், பாடி உள்ளிட்ட பகுதிகளில் சங்கிலி பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து நடைபெறும் சம்பவங்களால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். அம்பத்தூர், அண்ணாநகர் போலீஸ் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் போலீசார் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதனால் போலீசார் சரிவர ரோந்து பணியில் ஈடுபடுவதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் செய்திகள்