அவினாசி அருகே கார்-பனியன் நிறுவன வேன்மோதல்
அவினாசி அருகே காரும்- பனியன் நிறுவனத்தின் வேனும் மோதிக்கொண்ட விபத்தில் வேனில் வந்த 15 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.
அவினாசி,
அவினாசியை அடுத்துள்ள எம்.நாதம்பாளையத்தில் பனியன் நிறுவனம் ஒன்று உள்ளது. இந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்களை நேற்றுகாலை கருவலூரில் இருந்து ஏற்றிக்கொண்டு அவினாசி நோக்கி வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. வேனை டிரைவர் நாச்சிமுத்து என்பவர் ஓட்டி வந்தார். அவினாசியை அடுத்த நம்பியாம்பாளையம் அருகே அதிவேகமாக வந்த வேன் அவினாசியிலிருந்து கருவலூர் நோக்கி சென்ற கார் மீது மோதியது.
மோதிய வேகத்தில் வேன், காரின் மீது சாய்ந்தது. இதனால் வேனில் இருந்த வடமாநிலத்தை சேர்ந்த பனியன் நிறுவன தொழிலாளர்கள் சரத்ஷா (வயது 28), குமுடா (52), பப்பித்தா (24), கிரிதரிராணா (40), விஜித்ரா (38), சினாவாஷ் (21) கிர்த்தாரிராவ் (35), பகீரது (18), பிஜய் (20), பிரகார்த் (20) லிபு (21) உள்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அவினாசியிலிருந்து 5 ஆம்புலன்சுகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அவினாசி அரசு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அவினாசியிலிருந்து கருவலூர் நோக்கி காரில் வந்த மயில்சாமி லேசான காயத்துடன் உயிர் தப்பினார். வேன் காரின் மீது சாய்ந்ததால் இடிபாடுகளுக்குள் சிக்கிய தொழிலாளர்கள் படுகாயத்துடன் கூச்சலிட்டனர். அப்போது விபத்து நடந்த பகுதியில் தோட்டம், காடுகளில் வேலை பார்த்தவர்களும், வழிப்போக்கர்களும் ஓடி வந்து கார் மீது சாய்ந்து கிடந்த வேனை நிமிர்த்தினர். பின்னர் பொதுமக்கள் உதவியுடன் காயம் அடைந்தவர்கள் ஆம்புலன்சுகளில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்பூர் மற்றும் அவினாசி பகுதியில் ஏராளமான பனியன் நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்க்கின்றனர். இவர்கள் பனியன் நிறுவனத்தின் வேன்கள் மூலம் வேலைக்கு அழைத்து வரப்படுகின்றனர்.
வேன் ஓட்டுனர்கள் அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் வேன்களை ஓட்டுவதால்தான் அடிக்கடி இதுபோன்ற விபத்துகள் ஏற்படுகிறது என்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தனியார் பனியன் நிறுவன வேன்களின் வேகத்தை கட்டுப்படுத்த தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.