நள்ளிரவில் துணிகரம் ஒர்க்ஷாப் உரிமையாளர் வீட்டில் 19 பவுன் நகை– பணம் கொள்ளை

மார்த்தாண்டம் அருகே நள்ளிரவில் ஒர்க்ஷாப் உரிமையாளர் வீட்டின் கதவை உடைத்து 19 பவுன் நகை– பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2018-03-24 23:00 GMT
குழித்துறை,

மார்த்தாண்டம் அருகே நட்டாலம், சரல்விளை பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ். அந்த பகுதியில் வெல்டிங் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வீட்டில் குடும்பத்தினருடன் தூங்கி கொண்டிருந்தார். இவரது வீடு இரண்டு மாடிகளை கொண்டது. நள்ளிரவு வீட்டின் மேல்மாடி கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்தனர்.

அவர்கள், மாடிபடி வழியாக வீட்டின் தரைத்தளத்துக்கு இறங்கி வந்தனர். அங்கு ஒரு அறையில் இருந்த மேஜையை திறந்து அதில்  வைத்திருந்த 19 பவுன் நகை, ரொக்கப்பணம் 30 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர்.

வீட்டின் உள்ளே மர்ம நபர்கள் நடமாடும் சத்தம் கேட்டு சுந்தர்ராஜ் திடீரென கண்விழித்து, ‘திருடன்... திருடன்...’ என சத்தம் போட்டார். உடனே, கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி  ஓடிவிட்டனர்.   

 இதற்கிடையே சுந்தர்ராஜ் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர். அவர்கள் கொள்ளையர்களை அந்த பகுதியில் தேடினர். ஆனால், அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

மேலும், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. மோப்ப நாய் சிறிது தூரம் ஓடிவிட்டு நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

தொடர்ந்து, சுந்தர்ராஜிடம் கொள்ளையர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அவர், தன்னை பார்த்ததும் கொள்ளையர்கள் தப்பி ஓடியதால் சரியாக அடையாளம் தெரியவில்லை என கூறினார்.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து மார்த்தாண்டம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஜான்விக்டர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்.

வீடு புகுந்து நகை– பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்