தூத்துக்குடியில் முதியவரிடம் ஏ.டி.எம். கார்டு மூலம் நூதன முறையில் பணம் அபேஸ் போலீசார் விசாரணை

தூத்துக்குடியில் முதியவரிடம் ஏ.டி.எம். கார்டு மூலம் நூதன முறையில் பணத்தை அபேஸ் செய்து மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-03-24 20:30 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடியில் முதியவரிடம் ஏ.டி.எம். கார்டு மூலம் நூதன முறையில் பணத்தை அபேஸ் செய்து மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏ.டி.எம். கார்டு

தூத்துக்குடி வடக்கு சோட்டையன் தோப்பை சேர்ந்தவர் பாண்டியராஜன் (வயது 65). இவர் தனது மகள் ஜெபா டென்சியின் ஏ.டி.எம். கார்டில் இருந்து பணம் எடுப்பதற்காக கடந்த 14–ந் தேதி தூத்துக்குடி வி.வி.டி. மெயின் ரோட்டில் உள்ள ஒரு வங்கியின் ஏ.டி.எம். மையத்துக்கு சென்றார். அப்போது அங்கு இருந்த சுமார் 27 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பாண்டியராஜனுக்கு பணம் எடுக்க உதவியதாக தெரிகிறது.

2 நாட்களுக்கு பிறகு ஜெபா டென்சி தனது செல்போன் எண்ணிற்கு வந்த குறுஞ்செய்திகளை பார்த்து கொண்டு இருந்தார். அப்போது வங்கி கணக்கில் இருந்து 3 முறையாக மொத்தம் ரூ.92 ஆயிரத்து 500 எடுக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தனது தந்தை பாண்டியராஜனிடம் கேட்டார். அப்போது அவர், தான் ரூ.5 ஆயிரம் மட்டுமே எடுத்ததாக கூறி, ஜெபா டென்சியின் ஏ.டி.எம். கார்டை அவரிடம் கொடுத்தார். அப்போது ஏ.டி.எம். கார்டு மாறி இருப்பது தெரியவந்தது.

விசாரணை

இதுகுறித்து ஜெபா டென்சி தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து வழக்குப்பதிவு செய்தார். முதற்கட்ட விசாரணையில் பாண்டியராஜன் கடந்த 14–ந் தேதி பணம் எடுக்க சென்ற போது, வாலிபர் ஒருவர் உதவி செய்வது போல் பாண்டியராஜனின் ஏ.டி.எம். கார்டை பெற்று பணத்தை எடுத்து விட்டு, அதற்கு பதிலாக மாற்று ஏ.டி.எம். கார்டை கொடுத்தது தெரியவந்தது. பின்னர் பாண்டியராஜன் சென்ற பின்னர், அந்த வாலிபர் ஜெபா டென்சியின் ஏ.டி.எம். கார்டு மூலம் ரூ.92 ஆயிரத்து 500–யை எடுத்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அந்த நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்