வாழ்வாதாரத்துக்கு வழிதேட வேண்டுமே...!

மதுரை ஐகோர்ட்டு கிளை பிறப்பித்த உத்தரவு கோவில்களில் கடைகள் வைத்திருக்கும் கடைக்காரர்களை அலறவிட்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

Update: 2018-03-24 07:42 GMT
துரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் கடந்த மாதம் தீ விபத்து ஏற்பட்டது. கோவிலில் கொழுந்துவிட்டு எரிந்த தீ பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. நல்லவேளையாக உயிர் பலி எதுவும் இல்லை.

இந்த தீ விபத்துக்கு முக்கிய காரணம் கோவில் வளாகங்களில் வைக்கப்பட்டு இருந்த கடைகள் என்று பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டினர். அதுமட்டுமின்றி, அனைத்து கோவில் வளாகங்களில் உள்ள கடைகளையும் உடனடியாக காலி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது.

இந்த நிலையில், இன்னொரு பிரச்சினை தொடர்பான மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு கிளை அதிரடி உத்தரவு ஒன்றை நேற்று முன்தினம் பிறப்பித்தது. அந்த உத்தரவு அறநிலையத்துறை அதிகாரிகளை மட்டுமின்றி, கோவில்களில் கடைகள் வைத்திருக்கும் கடைக்காரர்களையும் அலறவிட்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

ஏனென்றால், ‘சாமி கும்பிட வரும் பக்தர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் கோவில்களை பராமரிப்பதும், கோவில் வளாகத்தை மாசு இன்றி தூய்மையாகவும், அமைதியான சூழல் நிலவும்படியும் வைத்திருக்க வேண்டும். இது அரசின் கடமை. கோவில்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கோவில்களில் நடக்கும் சட்டவிரோத சம்பவங்கள், முறைகேடுகளை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், கோவில் வளாகத்தில் இருக்கும் வணிக நோக்கிலான கடைகளை மூட அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக 8 வாரத்தில் உரிய சுற்றறிக்கையை அனைத்து கோவில் நிர்வாகங்களுக்கும் அறநிலையத்துறை அனுப்ப வேண்டும்’ என்பதுதான் அந்த உத்தரவு.

இந்த தீர்ப்பு வரவேற்க கூடிய ஒன்றுதான். பக்தர்கள் அமைதியான சூழலில் சாமிக்கும்பிடவும், கோவில்களில் முறைகேடுகள் இன்றி நிர்வாகங்கள் செயல்படவும் இது தேவையான ஒன்றுதான்.

ஆனால், பல ஆண்டுகளாக கோவில் வளாகங்களில் கடை வைத்து தேங்காய், பூ, பழங்கள், மாலைகள் போன்ற பொருட்களை விற்பனை செய்து வரும் கடைக்காரர்களால் திடீரென உடனே காலி செய்வது என்பது இயலாத காரியம். ஏனென்றால், கடைகளின் மூலம் கிடைக்கும் வருமானத்தில்தான் கடைக்காரர்கள் தங்களின் குடும்பத்தை கவனித்து வருகிறார்கள்.

அதை நம்பியே தான் பிள்ளைகளின் படிப்புக்கும், திருமணத்துக்கும் கடன் வாங்கி இருப்பார்கள். அதையெல்லாம் திரும்ப செலுத்த வேண்டும். மேலும், இதர தேவைகளுக்கும், சுபகாரியங்களுக்கும் தங்கள் கடைகளில் கிடைக்கும் வருமானத்தையே நம்பி இருப்பவர்கள் திடீரென கடைகளை காலி பண்ணச் சொன்னால் என்ன செய்வார்கள்?

பல ஆண்டுகளாக கடை வைத்து இருப்பவர்களுக்கு கடை வைக்க மாற்று இடம் ஏற்பாடு செய்துகொடுக்காமல் காலி பண்ணச் சொன்னால் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும். அவர்களால் கோவில்களுக்கு அருகில் உடனடியாக புதிய இடங்களை வாடகைக்கு பார்க்க முடியாது. அதை பார்த்தாலும், அதிக வாடகை, முன்பணம் கொடுக்க வேண்டி இருக்கும். இதனால் அவர்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்படும்.

மேலும் ஒரு இடத்தில் வழக்கமாக சென்று பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் புதிய இடங்களுக்கு செல்வார்கள் என்று கூற முடியாது. கடையை காலி செய்பவர்கள் புதிதாக எந்த தொழிலையும் தொடங்க முடியாது. இதனால் வாழ்வாதாரத்தை முற்றிலும் இழக்கும் கடைக்காரர்கள் அகதிகளை போல தவிக்க வேண்டிய சூழல் ஏற்படும்.

‘தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் 36 ஆயிரம் கோவில்கள் உள்ளன. இதில், வருமானம் உள்ள கோவில்கள் எத்தனை? என்றால், விரல் விட்டு எண்ணிவிடலாம். 10 முதல் 15 கோவில்களில் தான் வருமானம் கிடைக்கிறது. அதில் முதல் இடத்தில் பழனி கோவில் உள்ளது. இதுபோன்ற கோவில்களில் கிடைக்கும் வருமானத்தை, வருமானம் இல்லாத பிற கோவில்களுக்கு பூஜை உள்ளிட்ட அன்றாட பணிகளுக்கு செலவு செய்யவேண்டிய நிலையில் அறநிலையத்துறை உள்ளது. கோவிலுக்கே வருமானம் இல்லை என்றால், அந்த கோவிலையும், கோவிலுக்கு வரும் பக்தர்களையும் நம்பி கடை வைத்திருக்கும் எங்களுக்கு என்ன வருமானம் கிடைத்து விடும்? சொற்ப வருமானத்தில் தான் காலத்தை ஓட்டுகிறோம். எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது. அதனால், இந்த உத்தரவை மறுஆய்வு செய்யகோரும் மனுவை அறநிலையத்துறை உடனே தாக்கல் செய்ய வேண்டும். அல்லது மேல்முறையீடு செய்யவேண்டும்’ என்று கடைக்காரர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆண்டவன் கருணை காட்டுவதைப் போல், கோவில்களில் கடைகள் வைத்து இருக்கும் எங்களுக்கும் அரசு கருணை காட்ட வேண்டும். அருள் நிறைந்த இடத்தில் வாழ்வுக்கு பொருள் தேடி வந்தவர்களை வறுமையாக்கி இருளில் மூழ்கடிக்கலாமா? என்றும் கடை வியாபாரிகள் வேதனையுடன் கூறினர்.

-திருச்செந்தூரான் 

மேலும் செய்திகள்