மேல்மலையனூர் அருகே சாலையோர மரத்தில் வேன் மோதல்; 18 பேர் படுகாயம்

மேல்மலையனூர் அருகே சுற்றுலா சென்ற போது சாலையோர மரத்தில் வேன் மோதிய விபத்தில் 18 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2018-03-23 21:15 GMT
மேல்மலையனூர்,

ஒடிசா மாநிலம் ஜகன்நாத் பூபனார் பகுதியை சேர்ந்தவர் அப்புட்டா மகன் கிருஷ்ணா (வயது 43). இவரும் அதே பகுதியை சேர்ந்த மேலும் 17 பேரும் புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் தங்கி இருந்தனர். இந்த நிலையில் இவர்கள் வேலூர் மாவட்டம் ஸ்ரீபுரத்தில் உள்ள பொற்கோவிலுக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று காலை கிருஷ்ணா உள்ளிட்ட 18 பேரும் ஒரு வேனில் ஸ்ரீபுரத்துக்கு புறப்பட்டனர். வேனை புதுச்சேரி முத்தியால்பேட்டையை சேர்ந்த ரமேஷ் என்பவர் ஓட்டினார்.

மேல்மலையனூர் அருகே கோடிக்கொல்லை என்ற இடத்தில் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தறிகெட்டு ஓடி சாலையோரம் இருந்த பனை மரத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் வேனின் இடிபாடுகளுக்குள் சிக்கி கிருஷ்ணா, பகன்டபட்டா மனைவி பாலி(45), நாராயணசாமி மனைவி பாரதிசாகுர்(61), குகன்அல்யா(75), ஜானகிநாயர்(67), சுமதிரை(60), மலோதிகுரு(64), நிரகதாஸ்(52), திவாகர் தாஸ் மனைவி சுரைக்கிதாஸ்(40), குர்தர்தாஸ்(65), தபசிகுரு(44), சுகனார்பியாரி(63) உள்ளிட்ட 18 பேர் படுகாயம் அடைந்தனர்.

அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் சுகுணாசாகுர், ஜானகிநாயர், குர்தர்தாஸ் ஆகிய 3 பேரும் மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் வளத்தி போலீசார் வழக்குப்பதிந்து விபத்துக்கு காரணமான வேன் டிரைவர் ரமேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்