பா.ஜனதா பிரமுகர் கார் எரிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழிசை சவுந்தரராஜன் உள்பட 650 பேர் கைது

‘பா.ஜனதா கட்சி பிரமுகர் கார் எரிப்பை கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழிசை சவுந்தரராஜன் உள்பட 650 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-03-23 23:15 GMT
கோவை,

கோவையில் பா.ஜனதா அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதற்கும், மாவட்ட தலைவர் நந்தகுமார் கார் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டதற்கும் கண்டனம் தெரிவித்து கோவை மாவட்ட பா.ஜனதா கட்சி சார்பில் காந்திபுரம் அரசு விரைவு பஸ் போக்குவரத்து கழக அலுவலகம் அருகே நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக பா.ஜனதா கட்சி மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். அதன்பின்னர் விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் ஆர்ப்பாட்டம் நடந்த காந்திபுரத்துக்கு வந்தார். அவர் வந்ததும் கண்டன ஆர்ப்பாட்டம் தொடங்கியது.

ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கி டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-

தமிழகத்திலும் பாரதீய ஜனதா ஆட்சி மலரும். எத்தனை குண்டுகளை வீசினாலும், பா.ஜனதா தொண்டனை ஒன்றும் செய்ய முடியாது. வைகோ அவர்களுடன் கூட்டணியில் இருக்கும் வரை எங்களுக்கு வெற்றி தான்.

ராம ரதத்துக்கு இருக்கும் வரவேற்பை போல பா.ஜனதாவுக்கும் வரவேற்பு உள்ளது. எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க பா.ஜனதா தயார். ஒரு பா.ஜனதா கட்சி கவுன்சிலர் கூட இல்லாத திரிபுராவில் கடுமையான உழைப்பால் வெற்றி பெற்றுள்ளோம். அதைப்போல் தமிழகத்திலும் ஆட்சியை பிடிப்போம். ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் ரத்தம் கொடுப்பவர்கள். ரத்தத்தை எடுப்பவர்கள் அல்ல. தமிழகத்தில் காவிகள் ஆளக்கூடாதா?. இதுவே பா.ஜனதாவினர் மீது கடைசி தாக்குதலாக இருக்கட்டும். பா.ஜனதாவினர் மீது இனி யாரும் கை வைக்கக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக அவர் நிருபர் களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சி தொண்டர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகி உள்ளது. கோவை மாவட்ட தலைவர் காரை எரித்த நபர்களை கைது செய்யவில்லை. பா.ஜனதா மாவட்ட அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுவீசியதில் உண்மையான குற்றவாளிகளை போலீசார் கைது செய்யவில்லை. கோவை தீவிரவாதிகளின் புகலிடமாக மாறி வருகிறது. இதில் காவல்துறையினர் மெத்தனமாக உள்ளனர். பா.ஜனதா அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய போதே நடவடிக்கை எடுத்து இருந்தால் இது தொடர்ந்து இருக்காது. எனவே போலீசார் மேலும் காலம் தாழ்த்தினால் அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில், மத்திய கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், பா.ஜனதா இளைஞர் அணி தேசிய துணை தலைவர் ஏ.பி.முருகானந்தம், மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், மாவட்ட தலைவர் நந்தகுமார், மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், கோட்ட பொறுப்பாளர் ஜி.கே.எஸ்.செல்வகுமார், இளைஞர் அணி பொதுச் செயலாளர் வசந்தராஜன், மாவட்ட தலைவர் சுதாகர், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், மாவட்ட தலைவர் தசரதன் மற்றும் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு செயலாளர் லட்சுமி நாராயணன் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

பா.ஜனதா கட்சியினரின் ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்காததால் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 650 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சென்று கணபதியில் உள்ள சி.எம். திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் இரவு 8 மணியளவில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். 

மேலும் செய்திகள்