திருவாடானை பஸ் நிலையத்திற்கு இரவு நேரங்களில் பஸ்கள் வந்துசெல்ல பா.ஜனதா மனு

திருவாடானை பஸ் நிலையத்திற்கு இரவு நேரங்களில் அனைத்து அரசு பஸ்களும் வந்து செல்ல உரியநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜனதா கட்சி சார்பில் அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுஉள்ளது.

Update: 2018-03-23 22:15 GMT
தொண்டி,

திருவாடானை தாலுகா தலைநகராக விளங்கி வருகிறது. இதனை சுற்றி 500-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திருவாடானை பஸ் நிலையத்தில் இருந்து தான் பல இடங்களுக்கு பஸ் ஏறி சென்று வருகின்றனர். இந்த பஸ் நிலையத்திற்கு தினமும் 150-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன.

ஆனால் இரவு நேரங்களில் திருச்சியில் இருந்து ராமேசுவரம் செல்லும் பஸ்களும், அதேபோல் ராமேசுவரம் மற்றும் ராமநாதபுரத்தில் இருந்து திருச்சி, காரைக்குடி, தேவகோட்டை செல்லும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ்களும் திருவாடானை பஸ் நிலையத்திற்கு வந்து செல்லாமல் இங்கிருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் உள்ள சி.கே.மங்கலத்தில் பயணிகளை இறக்கி விட்டு சென்று விடுகின்றன.

இதனால் பொதுமக்கள் அந்த நேரத்தில் வேறு பஸ் வசதியில்லாத நிலையில் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து திருவாடானைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதுபோன்ற நிலையால் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், மாற்றுதிறனாளிகள் என அனைத்து தரப்பினரும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

மேலும் இரவு நேரங்களில் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் மிகுந்த மனவேதனையோடு பயத்துடன் நடந்து செல்கின்றனர்.

பல நேரங்களில் பொதுமக்கள் திருவாடானை பஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று இறக்கி விடுங்கள் என பஸ் டிரைவர், கண்டக்டரிடம் கேட்டால் சரியான முறையில் பதில் சொல்லாமல் வீண் தகராறு செய்கின்றனராம். அப்படிப்பட்ட நிலையில் டிரைவர் மற்றும் கன்டக்டர்கள் பொதுமக்களை தரக்குறைவாக பேசி தாக்க முயல்வது, போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

பொதுமக்கள் சிலர் இறங்க மறுத்தால் தேவகோட்டைக்கு கொண்டு சென்று இறக்கி விடுவது என போக்குவரத்து ஊழியர்களின் அநாகரீக செயல்களால் பொதுமக்கள் பெரும் துன்பத்தை சந்திக்க நேரிடுகிறது. இதுகுறித்து இப்பகுதி மக்கள் சார்பில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு இரவு நேரங்களில் திருச்சி, ராமேசுவரம் செல்லும் பஸ்கள் அனைத்தும் திருவாடானை பஸ் நிலையத்திற்கு வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதுபோன்ற பொதுமக்களுக்கு விரோதமாக செயல்படும் போக்குவரத்து ஊழியர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு மற்றும் உயர் அதிகாரிகளுக்கு பொதுமக்கள், பா.ஜனதா கட்சி சார்பில் தாலுகா பொருளாளர் கோபிநாத் கதிரேசன் மனு அனுப்பி உள்ளார். 

மேலும் செய்திகள்