ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் நீக்கம்: திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் 147 பேர் ராஜினாமா செய்ய முடிவு

ரஜினி மக்கள் மன்ற திண்டுக்கல் மாவட்ட செயலாளரை பதவியில் இருந்து நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நிர்வாகிகள் 147 பேர் கூண்டோடு ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர்.

Update: 2018-03-23 22:45 GMT
திண்டுக்கல்,

நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கி வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக கடந்த டிசம்பர் மாதம் அறிவித்தார். தற்போது மாவட்டம் தோறும் ரஜினி மக்கள் மன்றத்துக்கு நிர்வாகிகளை நியமனம் செய்யும் நடவடிக்கையில் ரஜினிகாந்த் தீவிரம் காட்டி வருகிறார். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டத்துக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். மாவட்ட செயலாளராக தம்புராஜ் என்பவர் நியமிக்கப்பட்டார்.

இந்தநிலையில் மன்றத்தின் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக கூறி, அவரை மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்குவதாக நேற்று முன்தினம் ரஜினி மக்கள் மன்ற மாநில நிர்வாகிகள் அறிவித்தனர். மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டு 7 நாட்களில் அவர் நீக்கப்பட்டது திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் நேற்று திண்டுக்கல் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது மாநகர செயலாளர் ஜோசப் கூறியதாவது:-

மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட தம்புராஜ் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ரஜினி ரசிகர் மன்ற தலைவராக செயல்பட்டு வந்தார். ரஜினிகாந்த் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்ததும் தன்னுடைய அரசு பணியை ராஜினாமா செய்துவிட்டு ரஜினி மக்கள் மன்றத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு கட்சி பணி செய்து வந்தார்.

இந்தநிலையில் மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்ட அவரை, எந்த தவறும் செய்யாதபட்சத்தில் ரஜினிகாந்திடம் ஆலோசனை பெறாமல் பதவியில் இருந்து மாநில நிர்வாகிகள் நீக்கி உள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திண்டுக்கல் மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் 147 பேர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து மக்கள் மன்ற நிர்வாகிகள் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்யப்போவதாக கடிதம் கொடுக்க உள்ளோம். மேலும் மன்றத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியில் தொடர்ந்து செயல்பட்டு கட்சி பணி ஆற்றவும் முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்ட தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி ரஜினி சரவணன் கூறியதாவது:-

மாநில நிர்வாகிகள் எங்களை தொடர்பு கொண்டு மாவட்ட செயலாளர் தம்புராஜை பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கி இருப்பதாக தெரிவித்தனர். ஆனால் அதற்கான காரணத்தை கூறவில்லை. அவர் எதற்காக பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்ற காரணம் இதுவரை தெரியவில்லை.

அரசியலை வைத்து பணம் சம்பாதிப்பவர்களுக்கு கட்சியில் இடம் கிடையாது என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார். ஆனால் மாநில நிர்வாகிகள் கூறும்போது, அரசியல்வாதிகள் 100 ரூபாய் செலவு செய்தால் நாம் 200 ரூபாய் செலவு செய்ய வேண்டும். இதனால் பணக்காரர்களை பொறுப்புகளுக்கு அழைத்து வாருங்கள், என்கின்றனர். ரஜினிகாந்தின் கருத்துக்கும், மாநில நிர்வாகிகளின் கருத்துக்கும் முரண்பாடு உள்ளது.

எந்த அடிப்படையில் நிர்வாகி நீக்கப்பட்டுள்ளார் என்று தெரியவில்லை. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அரவிந்த் யார் என்றே எங்களுக்கு தெரியாது. அவர் ரஜினி ரசிகர் மன்றத்தில் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது. அவருக்கும் எங்களுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்