வீடுகளின் பூட்டை உடைத்து திருடிய வழக்கில் 2 பேர் கைது

வளசரவாக்கத்தில் பகல் நேரங்களில் வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடிய வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-03-23 22:45 GMT
பூந்தமல்லி,

சென்னை வளசரவாக்கம், ராமாபுரம் ஆகிய பகுதிகளில் பகல் நேரங்களில் வீட்டை பூட்டி விட்டு கடை மற்றும் பள்ளிக்கு சென்று வருபவர்களின் வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச்செல்லும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இது குறித்து வளசரவாக்கம் உதவி கமிஷனர் சம்பத் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் முத்துராஜா, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராம் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைத்து பட்டப்பகலில் வீடுகளின் பூட்டை உடைத்து திருடும் கொள்ளையர்களை தேடி வந்தனர்.

மேலும் திருட்டு சம்பவம் நடைபெற்ற இடங்களில் வைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் சேகரித்து, அதில் சந்தேகப்படும்படியாக இருந்த உருவங்களை வைத்து விசாரித்து வந்தனர்.

இந்தநிலையில் ஆந்திர மாநிலம் வாரங்கல் பகுதியை சேர்ந்த சிவா என்ற சின்ன சிவா(வயது 20), சூர்யா(20) ஆகிய 2 பேரை சந்தேகத்தின்பேரில் பிடித்து போலீசார் விசாரித்தனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான மர்மநபர்களின் உருவங்ளோடு, இவர்கள் இருவரின் உருவங்களும் ஒத்துப்போனது.

இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் இவர்கள் 2 பேரும் வளசரவாக்கம், ராமாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பகல் நேரங்களில் பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிடுவார்கள்.

பின்னர் அந்த வீட்டின் உரிமையாளர்கள் வருவதற்குள், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகை, பணத்தை திருடிச்சென்று விடுவதை வழக்கமாக கொண்டு இருந்தனர் என்பது தெரிந்தது.

மேலும் இவர்கள், போலீசாரிடம் சிக்காமல் இருக்க சென்னையில் வாடகைக்கு வீடு எடுத்து தங்காமல் மெரீனா கடற்கரை பகுதி மற்றும் சாலையோரம் உள்ள நடைமேடைகளில் தங்கி வந்துள்ளனர். வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிய உடன் அதை விற்று, அதில் கிடைக்கும் பணத்துடன் ஆந்திராவுக்கு சென்று தலைமறைவாகி விடுவார்கள்.

கையில் உள்ள பணம் முழுவதும் செலவானதும், மீண்டும் சென்னைக்கு வந்து அடுத்த திருட்டு சம்பவத்தில் ஈடுபடுவார்கள் என்பது அவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

கைதான 2 பேரிடம் இருந்தும் 15 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்த போலீசார், பின்னர் இருவரையும் சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்