மதத்தை உடைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் காங்கிரசுக்கு இல்லை

மதத்தை உடைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் காங்கிரசுக்கு இல்லை என்று மந்திரி மகாதேவப்பா கூறினார்.

Update: 2018-03-22 22:53 GMT
மைசூரு,

மைசூருவில் நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மாவட்ட பொறுப்பு மந்திரி மகாதேவப்பா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

லிங்காயத்துக்கு தனி மத அங்கீகாரம் வழங்குவது சம்பந்தமாக நிபுணர்கள் சமர்ப்பித்த அறிக்கையை அரசு பரிசீலனை செய்துள்ளது. மதத்தை உடைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் காங்கிரசுக்கு இல்லை. டி.நரசிப்புரா எனது தொகுதி ஆகும். மைசூரு மாவட்டத்தையும், இங்குள்ள மக்களையும்விட்டு செல்வதற்கு எனது மனம் விரும்பவில்லை. மைசூரு மக்களுடனேயே இருந்து கட்சி பணி ஆற்றுவேன். மைசூருவுக்கும், எனக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

நான் தோல்வி அடைந்த போது இப்பகுதி மக்கள் தான் எனக்கு ஆறுதல் தந்தார்கள். அதனால் மைசூரு மக்களை நான் மறக்கமாட்டேன். இந்த ஆண்டு(2018) நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் கர்நாடக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

தேர்தலில் யார், யாருக்கு டிக்கெட் கொடுக்க வேண்டும் என்றும் கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும். ஏற்கனவே கிடைத்துள்ள வரலாற்று நூல்களை இளைஞர்கள் படித்து ஆராய்ந்தால், அதில் ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு வரலாறு இருப்பது தெரியவரும். இதை தெரிந்து கொள்ள இளைஞர்களுக்கு ஆர்வம் வேண்டும்.

மாநிலத்தில் 9,400 வரலாற்று நூல்கள் உள்ளன. அதில் பெரும்பாலான நூல்கள் மைசூரு பல்கலைக்கழக நூலகத்தில் பாதுகாக்கப்படுகின்றன. அந்த நூல்களை இன்றைய காலத்தவர்கள் ஆராய்ந்து, படித்து எந்தந்த மன்னர்கள் காலத்தில் என்னென்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். உண்மையான வரலாற்றை இதன் மூலமாக மட்டுமே அறிந்து கொள்ள முடியும்.

சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு இத்தகைய நூல்களில் உள்ள உண்மைகளை மறைத்து திருத்தி எழுதி மக்களை குழப்பத்திற்கு உள்ளாக்கி இருக்கிறார்கள். ஆராய்ச்சி மற்றும் ஆய்வு செய்யும் மாணவ-மாணவிகள் எந்த காரணத்தை கொண்டும் நூல்களில் இருக்கும் வரலாற்று விஷயங்களை திருத்தக்கூடாது. நாட்டை ஆண்ட முகலாயர்கள், சுல்தான்கள், ஆங்கிலேயர்கள் ஆட்சி காலங்களில் கண்டுபிடிக்கப்பட்ட தாமிரம், பித்தளை, வெள்ளி, தங்க நாணயங்கள் அந்த காலத்தின் வரலாற்றை நினைவுபடுத்துகிறது.

இவ்வாறு மந்திரி மகாதேவப்பா கூறினார். 

மேலும் செய்திகள்