தலைவாசல் அருகே லாரி டிரைவர் மர்ம சாவு; உறவினர்கள் சாலை மறியல்

தலைவாசல் அருகே மர்மமான முறையில் லாரி டிரைவர் இறந்து கிடந்தார். இதற்கு நடவடிக்கை எடுக்கக்கோரி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2018-03-22 22:00 GMT
தலைவாசல், 

தலைவாசல் அருகே உள்ள வீரகனூர் பகுதியில் ஒரு விவசாய தோட்டத்தில் உள்ள கிணற்றில் ஆண் பிணம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் வீரகனூர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் அந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். 50 அடி ஆழ கிணற்றில் மிதந்த உடலை தீயணைப்பு துறையினர் மீட்டு போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் உடலை கைப்பற்றி அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் பிணமாக கிடந்தவர் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் சின்னதுரை (வயது 35) என்பது தெரியவந்தது. அவர் எப்படி? இங்கு கிணற்றில் பிணமாக மிதந்தார் என்பது தெரியவில்லை.

மேலும் போலீஸ் விசாரணையில், கடந்த 10-ந் தேதி லாரியில் சின்னதுரை வந்த போது, வீரகனூர் பகுதியில் ஒரு மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த பழனிமுத்து என்பவர் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆத்தூர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனிடையே மோட்டார் சைக்கிள் மீது மோதியதும், லாரியில் இருந்து இறங்கி சின்னதுரை ஓடி உள்ளார். அப்போது அவரை சிலர் துரத்தி சென்றுள்ளனர். அதன் பின்னர் அவர் என்ன? ஆனார் என்பது தெரியவில்லை. இதனிடையே தற்போது கிணற்றில் பிணமாக கிடந்துள்ளார்.

எனவே மர்மமான முறையில் பிணமாக கிடந்த சின்னதுரையின் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், விபத்து ஏற்பட்டதும் ஓடிய சின்னதுரையை துரத்திச்சென்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பழனிமுத்து உறவினர்கள் மீது சந்தேகம் உள்ளதால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும், சரியாக தகவல் கொடுக்காத லாரி உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை 9 மணிக்கு சின்னதுரையின் உறவினர்கள், வீரகனூர்-பெரம்பலூர் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது பற்றி தகவல் அறிந்ததும் ஆத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு பொன்கார்த்திக், தாசில்தார் வரதராஜன் உள்பட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து காலை 11 மணிக்கு சாலை மறியல் கைவிடப்பட்டது. இதன் காரணமாக வீரகனூர்-பெரம்பலூர் ரோட்டில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக் கப்பட்டது. லாரி டிரைவர் சின்னதுரை கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் வீரகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.

மேலும் செய்திகள்